ப்ரியாமணி

 Priyamani-Life Story-1

பாரதிராஜாவின் அறிமுகமாக கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமாகி நம்மை கண்களால் கைது செய்தவர் பிரியாமணி. நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று பாராட்டப்பட்ட அந்தப் படத்தில் வித்யா கேரக்டரில் நடித்த போதே, தன் ‘தமிழ்’ முகத்தால் அனைவரையும் கவர்ந்தார் பிரியாமணி. ஆனால் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. எனவே பெரிய ஹீரோக்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் விட,  அடுத்து பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ துளசியாக வந்தார்.

அதில் பிரியாமணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அந்தப் படமும் பாக்ஸ் ஆஃபீசில் தோல்வியைத் தழுவ, அடுத்து தமிழில் படங்களே இல்லை என்றானது. அடுத்துத் தான் அவருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு தான் பருத்திவீரன். தமிழ்சினிமாவின் குறிப்பிடத்தக்க படமாக, போலிபாசங்கற்ற படமாக அது அமைந்தது. பட்டிதொட்டி எங்கும் முத்தழகு பிரபலம் ஆனார். எங்கள் பகுதியில் பலரும் அவரை முத்தழகு என்றே சொல்வதைப் பார்த்திருக்கின்றேன்.

அந்தப் படத்தில் பிரியாமணியின் ப்ளஸ் பாயிண்டாக ஆனது அவரது ஆண்மை கலந்த குரல் தான். தைரியமான பெண்ணான முத்தழகு கேரக்டருக்கு, அந்தக் குரல் நன்றாகப் பொருந்திப் போனது. தமிழ் சினிமாவிற்கு இன்னொரு குடும்பப் பாங்கான நடிகை கிடைத்து விட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அந்த நேரத்தில் தான் பிரியாமணி தன் வாழ்வின் தவறான முடிவை எடுத்தார்.

Priyamani-Life Story-3

இனிமேல் தான் கவர்ச்சியாக மட்டுமே நடிக்கப்போவதாகவும், இனிமேல் தாவணி/சேலை அணிந்து நடிக்க தான் தயாராக இல்லை என்றும் அறிவித்தார். இதை விடவும் மடத்தனமான செய்லை வேறொன்றும் இல்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்பப் பாங்கான நடிகைகளுக்கென்று ஒரு இடம் உண்டு. ரோஜா போன்ற நடிகைகள் கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்தபோது, மீனா போன்றோர் கவர்ச்சி காட்டாமலேயே பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தனர்(ஆரம்ப காலங்களில்!).

இதற்குச் சரியான உதாரணம் என்றால் அது தேவயானி தான். மூன்றாந்தர பீகாரி(போஜ்பூரி) படங்களில் பிட்டுப் பட ரேஞ்சில் நடித்து திரையுலகில் அறிமுகமான அவர் தமிழிலும் கவர்ச்சிப் பதுமையாகவே அறிமுகம் ஆனார். ஆனால் பருத்தி வீரன் போன்ற மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். அதன்பின் கவர்ச்சி காட்டாமலேயே வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்தார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரிய நடிப்புத் திறமை உள்ள நடிகை அல்ல என்பது தான் வேடிக்கை.

Priyamani-Life Story-4

ஆனால் தேசிய விருது பெறும் அளவிற்கு திறமை வாய்ந்த பிரியாமணி, தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் சதையை நம்பிக் களம் இறங்கினார். தேவயானியும் ரிடையர்டு ஆகியிருந்த அந்த நேரத்தில், பிரியாமணியால் அவரது இடத்தைப் பிடித்திருக்க முடியும். அதை விடுத்து கவர்ச்சி ஆயுதத்துடன் அவர் நடித்த அடுத்த படம் ‘மலைக்கோட்டை’. முத்தழகாக அவரை ரசித்த மக்கள், இதில் வெறும் கவர்ச்சிப் பொம்மையாக வந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் ‘தோட்டா’ என்ற குப்பைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதன் மூலம், கதையை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு எந்த திறமை இல்லை என்பது தெரிந்து போனது.

பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் தாவணியே இனி அணிய மாட்டேன் என்ற உயர்ந்த லட்சியத்தால் வீழ்ந்தார் பிரியாமணி. மலைக்கோட்டை, தோட்டா தோல்விக்குப் பிறகு பிரியாமணிக்கு தமிழில் படங்களே இல்லை என்றானது.

தெலுங்குப் பக்கம் கரை ஒதுங்கினார். துரோணா போன்ற படங்களில் மித மிஞ்சிய கவர்ச்சி காட்டி நடித்தார். தன் அடையாளத்தைத் தொலைத்து குலுக்கல் நாயகிகளில் ஒருவர் ஆனார். தெலுங்குப் பட வாய்ப்புக்காக ‘தமிழில் இப்போது நல்ல படங்களே வருவதில்லை ‘என்று தத்துவமாக கொட்டினார். அதைச் சொல்லிவிட்டு துரோணா என்ற உலகத் தரம் வாய்ந்த படத்தில் நடித்தார்.

இதை விடக் கொடுமை இயக்குநர் அமீர் பற்றி பருத்தி வீரன் படத்திற்கு முழுச் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பியது தான்.  பருத்திவீரன் படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையே பட பட்ஜெட் தொடர்பாக பிரச்சினையாகி இருவரும் கோர்ட்டில் வழக்குப் போட்டு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இதை அனைவரும் அறிந்த விஷயம் தான். தேசிய விருதின் அருமை பற்றியெல்லாம் இவருக்கு எதுவும் தெரியாது என்பதே அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது.

Priyamani-Life Story-5

நடிகர் அஜித் ஒரு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தபோது, தயாரிப்பாளர் பணம் இல்லாமல் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின் அஜித் தன் சொந்தக் காசில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து திரும்ப அழைத்து வந்தார். நடிகர் விக்ரம் தன் பெரும்பாலான படங்களுக்கு முழுச்சம்பளம் வாங்கியதே இல்லை. சினிமாத் துறையில் முழுச்சம்பளம் கிடைப்பது என்பது வளரும் நிலையில் உள்ள நடிகர்களுக்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான்.

பருத்திவீரன் மூலம் கிடைத்த புகழுடன் ஒப்பிடும்போது, அதன் மூலம் பெற்ற தேசிய விருதுடன் ஒப்பிடும்போது சம்பளம் பெரிய பிரச்சினையே அல்ல. படமே இல்லாத நிலையில் கிடைத்த வாய்ப்பான பருத்தி வீரனுக்கு பெரிதாக என்ன சம்பளம் பேசி இருக்கப் போகிறார்கள்?

கடைசியாக பிரியாமணி தமிழில் நடித்த மணிரத்னத்தின் ராவணன் என்ற ’அரிய ‘கலைப் படைப்பும் அவரைக் கைவிட்டது. அத்துடன் அவரது தமிழ் சினிமா வாழ்வும் முடிந்து போனது.

தன்னை ஒரு நடிப்புத் திறமை மிக்க நடிகையாக நிலைநிறுத்தும் வாய்ப்பையும் கெடுத்துக் கொண்டு, வாயாலேயே தானும் கெட்ட ‘கூறு கெட்ட’ நடிகை என்று தான் தமிழ்சினிமா வரலாறு இவரைக் குறித்து வைக்கும்!