Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமண உறவில் தனக்கு நம்பிக்கை இல்லை! நடிகை லட்சுமி மேனன்.

பரத நாட்டியத்தில் கலக்கிக் கொண்டிருந்த லட்சுமி மேனனை, மலையாள இயக்குநர் வினயன் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். ரகுவிண்டே சுகந்தம் ரசியா படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், மலையாளத்தில் கவனிக்கப்படும் ஹீரோயினாக வளர்ந்தார். அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்த லட்சுமி மேனன், சசிக்குமார் நடித்த சுந்தர பாண்டியன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். முதல் படமே பெரிய அளவில் லட்சுமி மேனனுக்கு ரீச் கொடுத்தது. சுந்தர பாண்டியன் படம் சூப்பர் ஹிட்டாக ராசியான நடிகைகள் லிஸ்டில் அவர் சேர்ந்தார். இதனால், அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. சுந்தர பாண்டியன் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதைக் கடந்த 2013ம் ஆண்டு லட்சுமி மேனன் வென்றார்.
சுந்தர பாண்டியன் படத்துக்குப் பின்னர், பிரபு சாலமன் இயக்கிய கும்கி, சசிகுமாருடன் குட்டிப்புலி, விஷாலுடன் பாண்டிய நாடு மற்றும் நான் சிவப்பு மனிதன், சித்தார்த்துடன் ஜிகர்தண்டா என பிஸியான நடிகையாக கோடம்பாக்கத்தில் வலம்வந்தார். அதைத்தொடர்ந்து சிப்பாய், கொம்பன் என் நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனன், கடந்த 2016ல் விஜய் சேதுபதியுடன் நடித்த றெக்க படத்துக்குப் பின்னர் தேடப்படும் ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்தார்.
பட வாய்ப்புகள் சரியாகக் கிடைக்காததால் சொந்த மாநிலமான கேரளாவில் வசித்து வந்த அவருக்கு பிரபு தேவா நடிக்கும் யங் மங் சங் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. படத்தின் இயக்குநர் எம்.எஸ்.அர்ஜூன், கேரளாவுக்குச் சென்று லட்சுமி மேனனிடன் கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார். வித்தியாசமான பிண்ணனியில் உருவாகும் இந்த படத்தில் யமுனா என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
இந்தநிலையில் யங் மங் சங் படம் மற்றும் சொந்த வாழ்வு என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் மனம் திறந்திருக்கிறார். அவர் கூறுகையில், `எனக்கு டயட் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. உடலைக் குறைக்கப் போவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவேன். பிரபுதேவா மாஸ்டர் கூட நடிக்கும் யங் மங் சங் படத்தில் டான்ஸ் ஆடுவதற்கு பெரிய ஸ்கோப் இல்லை. கதைப்படி அது தேவைப்படவும் இல்லை. எனக்கு அந்த படத்தில் பாடல்களே இல்லை. அதேபோல், திருமண உறவில் எனக்கு நம்பிக்கையில்லை.
கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் அன்பு, காதல் கிடைக்கும்னு இல்ல. கல்யாணம் பண்ணமாகூட அன்பு, காதலைப் பெறலாம். நான் சொல்றது மத்தவங்களுக்குப் புரியுமானு தெரியலை. ஆனா, அது எனக்கு மட்டும் புரிஞ்ச விஷயம். நான் திருமணத்தை நம்பல. திருமணம் பண்ணிக்கவும் மாட்டேன். அதுக்காக, எனக்கு லைஃப் பார்ட்னர் இருக்காதுனு சொல்ல வரலை. கண்டிப்பா இருப்பார். ‘பார்ட்னர்’ங்கிற வார்த்தைக்கு வலு சேர்க்க நிறைய நம்பிக்கை, அன்பு, காதல் கொண்ட நபர் வேணும். அதைக் கல்யாணம்ங்கிற வார்த்தையில சுருக்க விரும்பலை. அதை, ‘லிவிங் டு கெதர்’னுகூட சொல்லமுடியாது என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
