படப் பிடிப்புத் தளத்தில் இருந்து யாரிடம் சொல்லாமல் ஐதரபாத்திற்கு பறந்து போனார் நடிகை பூனம் கௌர். இவரால் தயாரிப்பாளருக்கு பல இலட்ச ரூபாய் நட்டத்தை ஏற்பட்டுள்ளதாம்.ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு நடிகை பூனம் கௌர்.

இவர் தமிழில் ‘நெஞ்சிருக்கும் வரை’ படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் வரிசையாக ‘சேவல்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பயணம்’, ‘வெடி’, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘என்வழி தனி வழி’, ‘நாயகி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தற்போது இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் இயக்கும் ‘நண்டு என் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் நாயகனாக. ஜித்தன் ரமேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. ஒரு சிலநாட்கள் நடித்த நிலையில் நடிகை பூனம் கௌர் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு ஐதராபாத் சென்று விட்டார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு “என்னால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது. மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை” என்றாராம்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ், “எங்கள் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க பூனம் கௌர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒப்பந்தம் செய்யும்போது எனது உடைகளை நானே தேர்வு செய்கிறேன். அதற்கான பணத்தை கொடுத்து விடுங்கள் என்றார் நாங்களும் ஓகே சொன்னோம்.

நாங்கள் எடுப்பது சிறு பட்ஜெட் படம். ஆனால் அவர் உயர்ரக ஆடைகளை கொண்டு வந்து அதிக பணம் கேட்டார். எங்களுக்கு அவ்வளவு பட்ஜெட் இல்லை என்றோம்.அவர் தங்குவதற்கு ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்தோம். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை. யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார். இவர் சென்றதால் படத் தயாரிப்பாளருக்கு பல இலட்ச ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.