‘பெப்சி’ உமாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. முதல் நட்சத்திர தொகுப்பாளினி. சினிமா ஹீரோயின்களுக்கு நிகரான புகழ் பெற்றவர்.

இவரிடம் ஒரு முறை போனில் பேசிவிட மாட்டோமா என்று தமிழ்நாடே தவம் கிடந்தது.

நடிகர்களே கூட உமா தங்களை கெஸ்ட்டாக அழைக்க மாட்டாரா என்று காத்துக் கிடந்த காலம்  உண்டு.

ஆனால் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் புகழின் உச்சத்தில் இருந்த போதே விலகி காணாமலும் போய் விட்டார். என்னாச்சு..? கொஞ்சம் களத்தில் இறங்கி  விசாரித்தால்..அட சம்பந்தமே இல்லாத ஒரு தொழிலில் இருக்கிறார், உமா.

பெப்சி உமா ஏற்றுமதி இறக்குமதி, மற்றும் கட்டிடத்துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார்.

பல சேனல்கள் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்துவிட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

ஆனால் உண்மைக் காரணம் என்று விசாரித்தால்  கொஞ்சம் அதிர்ச்சி தகவலாக கொட்டுகிறார்கள்.

அதாவது  சூரியத் தொலைக்காட்சிக்கும், மூத்த தலைவர் குடும்பத்திற்கும் சிக்கலாகி தனியாக ஒரு சேனல் துவங்கியது தலைவர் குடும்பம்.

அப்போது சூரிய நிறுவனத்தில் வேலை செய்த பலர் அன்பான ‘மிரட்டலுக்கு’ பயந்து புலம் பெயர்ந்து தலைவர் தொலைகாட்சிக்கு போனார்கள்.

வரமாட்டேன் என்று சொல்ல முடியாது. காரணம் தலைவர் ஆட்சி அப்போது. ஆனால் உமாவை மிரட்டவோ..விலைபேசவோ யாராலும் முடியாது. தன் மனசாட்சி எதை சரி என்று சொல்கிறதோ அதை மட்டுமே செய்பவர்.

வேறு வழி  இன்றி சின்னத்திரையில் இருந்தே தன்னை விலக்கிக் கொண்டார் என்று அப்போது பேசப்பட்டது. இப்போதும் பேசப்படுகிறது.

ஜெயா டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கும்  இவருக்கும் நடந்த சண்டை போலீஸ் கேஸ் ஆனதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவரை கண்ட சில பத்திரிக்கையாளர்கள் இவரிடம் பேசினார்கள். அப்போது   தனக்கு புகழ்தேடிக்கொடுத்த சின்னத்திரையை மறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினாராம்.

புதிய கான்செப்ட்டோடு நல்ல நிகழ்ச்சி அமைந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஐடியா இருக்கிறதாம், பெப்சி உமாவுக்கு’

தற்போது, தனது குடும்பம், தனது வேலை என்று ஒரு நல்ல குடும்ப தலைவியாக தனது கடமைகளை செய்து வருகிறார்,  பெப்சி உமா.