‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக லாவண்யா திரிபாதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’நாச்சியார்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதனைத் தொடர்ந்து ‘அடங்காதே’ மற்றும் ‘குப்பத்து ராஜா’ ஆகிய படங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.

இப்படங்களைத் தொடர்ந்து ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். முழுக்க லண்டனில் படமாக்க படவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மற்றும் நடிகர்கள் ஒப்பந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் இவர் நடித்துள்ள ‘மாயவன்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

எம்.எம். சந்திரமெளலி இயக்கவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’ போன்ற பிரபல இந்தி படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். தெலுங்கில் ‘100% லவ்’ படத்தை இயக்கிய சுகுமார், தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார்.