‘பலூன்’ பட தயாரிப்பாளர் படத்தின் புரமோஷனுக்கு ‘பலூன்’ படக் காதலர்கள் வர மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் தோல்வி படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெய். தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பலூன்’ . இந்தப் படம் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த நிலைக்கு உயர முடியும். இல்லையேல் அவரது சினிமா வாழ்க்கைக்கு சிக்கலான சூழ்நிலை ஏற்படும் என்றே தெரிகிறது.

‘பலூன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. 70 எம்எம் நிறுவனத்துடன் இணைந்து திலீப் சுப்பராயன் தயாரித்து வரும் இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். ஜெய்யுடன் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘பலூன்’ படத்தை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் விரைவில் வெளியிடவிருக்கிறது. இந்நிலையில் ‘பலூன்’ படத்துக்கு பிரஸ்மீட் வைத்து புரமோஷன் வேலைகளை தொடங்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். இதற்காக நடிகர் ஜெய்யை அழைத்தபோது புரமோஷனுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதுபோல் அஞ்சலியை கடந்த சில வாரங்களாக போனில் தொடர்புகொள்ள முயன்று வெறுத்துப்போய் விட்டாராம் தயாரிப்பாளர். அஞ்சலியும் போனை எடுக்காததால் அவரும் புரமோஷனுக்கு வர விருப்பமில்லை என்றே தெரிகிறது.