Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கும் நடிகர்கள்!

actors supports jallikattu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கும் நடிகர்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் பொங்கல் திருநாள் இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாக காலம் காலமாக உழவர் திருமகன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வீட்டில் ஒரு அங்கத்தினராகவும், உழவுக்கு உயிரூட்டும் காளைகளை வணங்கும் விதமாகவும் ஏறுதழுவுதல் விழா பெரும்பாலான கிராமப்புறங்களில் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்படும் இவ்விழா, காலமாற்றத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி என்று பெயர் அளவில் நிறம் மாறியது. அதன் விளைவு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏறுதழுவுதல் விழா கொண்டாட முடியாமல், உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதன் பின்னணியில், பொருளாதார ரீதியிலான சில மாறுதல்களை இந்தியாவுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் முயற்சியாக ஈடுபட்ட, பீட்டா என்ற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வருகிறது.

‘வந்தோரெல்லாம் வழிப்பறிக்க வாய்ப்பு தந்த தமிழகம், இன்று முதுகெலும்பாகத்தான் இருக்கிறது’ என்ற கூற்றினை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவது, தொடர்ந்து நிருபணமாகி வருகிறது. அந்த வகையில், விவசாயத்தைப் பாழ்படுத்தும் நோக்கில் காவிரிப் பிரச்னை, முல்லை பெரியாறு விவகாரம், அதன் தொடர்ச்சியாக மீத்தேன், கெயில் எரிவாயுத் திட்டம், அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டுக்குத் தடை என தொடர்ந்து இறுதியில் அடிமடியில் கைவைக்கும் வகையில் பண்பாட்டு கலாசார விழா பொங்கல் திருநாள் விடுமுறை நீக்கம் என, தமிழ் பண்பாட்டை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையின் உச்சம். இது தமிழர் பண்பாட்டின் மீதான பெரும் தாக்குதலாக அனைத்து தமிழர்களும் தற்போது பார்க்கத்தொடங்கி உள்ளதால், ஜல்லிக்கட்டு விவகாரம் மல்லுக்கட்டும் அளவுக்கு வீதிக்கு வந்துள்ளது.

தமிழகம் இப்படியொரு நெருக்கடி நிலையில் சிக்கித் தவிக்கும் நிலையில், பண்பாட்டுப் பாரம்பரியம் அழிக்கப்படும் இப்படியான தருணங்களில், உழவனுக்கு உயிர் கொடுக்கும் விதமாகத் தமிழ் திரைப்பட உலகில் ஒவ்வொரு நடிகர்களாகக் கைகொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் கண் முன் நிற்கும் அரசியல் தடைகளையும் பொருட்படுத்தாமல், நடிகர்கள் முன் வந்திருப்பதை நிச்சயம் நினைவுகூறத்தான் வேண்டும்.

 

கமல்ஹாசன்: பிரியாணிக்குத் தடையா?

“தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை போட்டியாகத்தான் கருத வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது; ஏறுதழுவுதல் என்பதில் இருந்து உருவானது. ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்றால், பிரியாணிக்குத் தடை உள்ளதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

விஜயகாந்த்: தமிழர் கலாசாரத்தை வென்றெடுப்போம்!

“தமிழர் கலாசாரத்தை வென்றெடுப்போம். நான் சிறுவயதிலேயே ஜல்லிக்கட்டுக்குச் சென்றவன். காளைகளை எங்கள் வீட்டின் பிள்ளைகளைப் போன்றுதான் பார்க்கிறோம். பீட்டா அமைப்புக்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சூர்யா: இது ஏறு தழுவுதல்!

“ஏறு தழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் இந்தப் போட்டிக்கு அனுமதி அளிக்கவேண்டும். இதற்கு அரசு முன்வந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது ஆதரவு எப்போதும் இதற்கு உண்டு”.

சிம்பு: இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது!

“தமிழை தாய்மொழியாகக் கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழில் ஐந்தாம் வகுப்பு வரை 99 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் முதலில் தமிழன், பிறகுதான் இந்தியன். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது. இதுவரை வெளியில் அடித்தீர்கள். இப்போது என் வீட்டுக்குள்ளேயே வந்து எனது கலாசாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியுமா?

ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப வெளிநாட்டு அமைப்புக்கு (பீட்டா) என்ன தகுதி இருக்கிறது. மாடுகளைத் துன்புறுத்தி கறக்கப்படும் பாலை குடித்தவர்களே காளை பற்றி பேசுகிறார்கள். தமிழர்கள் அனாதைகள் அல்ல, கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்தார்களா? கலாசார போட்டியான ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி கேட்க பீட்டா அமைப்பு யார்? இதுவரை வெளியில் அடித்த நீங்கள், எங்கள் வீட்டில், எங்கள் கலாசாரத்தில் வந்து கை வைக்கிறீர்கள். தன்மானம், இனம் மீது உணர்வு இருப்பதால்தான் தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி நீர் தர மறுக்கிறது.

அரசியல் கட்சி, திரைப்படத்துக்காகவா போராடினார்கள்? தமிழ் கலாசாரத்துக்கு போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது ஏன். தனித்தனியாக போராட்டம் நடத்துவதால்தான் போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் தமிழக மாணவர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். தமிழர்கள் அனாதையா, கேட்க ஆளில்லை என நினைத்து விட்டீர்களா? தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டு கிடக்கின்றனர். அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. அனைவரும் தனித்தனியாக போராடுவதால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அனைவரும் தங்கள் வீட்டு முன்பு மவுனப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தனது குரலுக்குத் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும்’ எனக் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்காக, போராடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக கூறிய சிம்பு, இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது” என்று ஆவேசக் குரல் எழுப்பினார்.

இவற்றுடன், “ஜல்லிக்கட்டுக்காக, போராடும் மாணவர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்ட தகவலைக் கேட்டு என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. ஒரு தமிழனாக உங்களுக்கு நான் இருக்கிறேன். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. அவர்களின் நிறம் என்ன என்பதை காட்டி விட்டனர். தற்போது நாம் அவர்களுக்கு நமது நிறம் மற்றும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். உண்மையான தமிழர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்று, தனது பேட்டிக்கு முன்னதாக டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது கோபத்தைக் காட்டியிருந்தார்.

டி. ராஜேந்தர்: தமிழனுக்கு பிறந்தவன் அப்படிதான் பேசுவான்..!

“தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் நிற்பது நானே. அனைத்து பிரச்னைகளுக்கும் எதிர்த்து குரல் கொடுத்தது நான்தான். அதனால் என் மகனும் பேசுகிறான். தமிழனுக்கு பிறந்தவன் அப்படிதான் பேசுவான். நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிடினும் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன். ‘ஜல்லிக்கட்டு மிருகவதை என்பது வெறும் கதைதான். ஆடு, மாடு, கோழியைக் கொன்று சாப்பிடுவது மிருக வதை இல்லையா? ஜல்லிக்கட்டை அழிக்க வெளிநாட்டினர்கள் சதி செய்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கறுப்புக் கொடி ஏற்றுங்கள். கட்சி சார்பில்லாமல் அனைவரும் ஜல்லிக்கட்டுக்காகப் போராட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தனுஷ்: தமிழர்களின் அடையாளம்!

“ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் அவர்களுடைய ஒருங்கிணைந்த குரல். ஜல்லிக்கட்டை ஆதரிப்போம், ஜல்லிக்கட்டு அவசியம் தேவையானது” என்று நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்: தமிழனாய் நானும் ஒருவன்..!

“ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும் ஒருவன்” என தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

விவேக்: பழமையை மறந்தவன் மனிதனே அல்ல!

“நாட்டு மாட்டுக்காகக் குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காகக் குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ்: கொம்பு வச்ச சிங்கம்டா!

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும், அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும்” தனது டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கருணாஸ்: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்..!

“நீதிமன்றத் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்” என சபதம் இட்டார்.

பாடகி சின்மயி: ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வது தவறு

“தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு ஒத்துழைக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழக கலாசாரத்துடன் இணைந்தது. விதிகளைக் கடுமையாக்கலாமே தவிர, ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வது தவறு” என்று கூறி உள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி: ‘வைரால் ஆகி வரும் பேட்டி..’

இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ‘ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும்’ என்றார். அதற்கு ஆர்.ஜே.பாலாஜி, “ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. கேரள கோயில்களில் யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை மகிழ்ச்சியுடன்தான் நிற்கின்றனவா?, அதேபோல் குஜராத்தில் ஒட்டகங்கள் ஆயிரக்கணக்கான கிலோ பொதிகளை சுமந்து செல்கின்றன. அதை எல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவேண்டும். மேலும், தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என அருகில் உள்ள மாநிலத்துக்கு கூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்துக்கு அந்த மாநிலம் தண்ணீர் வழங்கவில்லை. அதை யாராவது கேட்டீர்களா?” என அவர் கொடுத்த தக்க பதிலடி, நேற்று முதல் வைரல் ஆகி வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த மற்ற நடிகர்களின் பேட்டியை விட, ஆர்.ஜே.பாலாஜி பேசியதே ஹைலைட் ஆகி, தற்போது வைரலாகி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆர்.ஜே.பாலாஜியை ‘தலைவா….’ என்று கூறி கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் அறிக்கை: ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதிசெய்வோம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சூரி, சந்தானம், ரோபோ சங்கர் என்று இன்னும் பல நடிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருந்த தமிழக அரசு, நடிகர்களின் திடீர் ஆதரவு குரலால் ஆடிப்போனது. நிலைமை கை மீறி போனதை உணர்ந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்றும், இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும் நேற்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

இதனிடையே, ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய கருத்து யுத்தமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தனை நாட்கள் பொறுமை காத்த இளைஞர்கள், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்களே நேரடியாக களத்தில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டம், அரசைத் தாண்டி மாணவர்கள் கையில் சென்றுள்ளதால், ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால், மத்திய அரசுடன் மல்லுக்கு நிற்கிறது தமிழக அரசு.

தை பிறந்தால் வழி பிறக்குமா…?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top