தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் தீவிரமாக போராட்டக் களத்தில் பங்கு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் பேசிய வீடியோ பதிவு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் விஜய் பேசியுள்ளதாவது:-

எல்லோருக்கு வணக்கம். நான் உங்கள் விஜய் பேசுறேன். உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களுடைய கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத் தான், பறிக்கிறதுக்கு அல்ல. தமிழனுடைய அடையாளம் ஜல்லிக்கட்டு.

எதையும் எதிர்பார்க்காம, யாருடைய தூண்டுதலும் இல்லாம எந்தவிதமான கட்சி பேதமும் இன்றி தமிழ் என்ற ஒரே உணர்வோடு இந்த போராட்டத்தில் குதித்திருக்கிற அத்தனை இளைஞர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

இது சம்பந்தமா கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்தால் நான் சந்தோஷப்படுவேன். இத்தனைக்கும் காரணமான அமைப்பை (பீட்டா) வெளியே அனுப்பிட்டா தமிழ்நாடே சந்தோஷப்படும்.

இவ்வாறு பேசியுள்ளார்.