ஏவி.எம்.சரவணனுடன் விஜயகாந்த்

‘சிவப்பு மல்லி’ (1981) படத்தில் விஜயகாந்த் – சந்திரசேகர்

தொழிலில் அவர் காட்டும் ஈடுபாடு, ஆர்வத்தைப் போலவே, சமுதாய வளர்ச்சியில் அவருக்கு இருக்கும் அக்கறையையும் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எங்கள் நிறுவனப் படங்களில் நடித்த போதெல்லாம், அவர் கொடுத்த ஒத்துழைப்பு என்னால் மறக்க முடியாத ஒன்று.
எங்கள் நிறுவனத்தில் முதன் முதலில் ‘சிவப்பு மல்லி’ என்ற திரைப்படத்தில்தான் விஜயகாந்த் நடித்தார்.

தெலுங்கில் ‘எர்ரா மல்லி’ என்ற படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. உடனே எங்கள் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த கே.வீரப்பன் என்பவரை அனுப்பி, அந்தப் படத்தை பார்த்து விட்டு வரும்படி கூறினோம். அவரும் படம் பார்த்து விட்டு வந்து ‘படம் ரொம்பப் பிரமாதம்’ என்று கூறினார். அவர் அவ்வளவு உறுதியாகச் சொன்னதன் காரணமாக, நாங்கள் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லை. தைரியமாக பணம் கொடுத்து அந்தப் படத்திற்கான தமிழ் உரிமையைப் பெற்றுவிட்டோம்.

பின்னர்தான் அந்தப் படம் கம்யூனிசம் பேசும் ஒரு படம் என்பதும், அதில் அவ்வளவு உறுதியான வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் எனக்கும் என் சகோதரர் குமரனுக்கும் எழுந்தது. படத்தை ஏவி.எம். பேனரில் தயாரிப்பதற்கே எங்களுக்கு தயக்கமாக இருந்தது. அதனால் பாலசுப்பிரமணியன் அண்ட் கம்பெனி என்ற பெயரில் அந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தோம். சுதந்திர தின நாளில் படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவானது. ராமநாராயணனை இயக்குனராக ஒப்பந்தம் செய்தோம்.

படத்தில் நடிக்க முதலில் கமலஹாசனிடம்தான் பேசினோம். ஆனால் அவரிடம் அந்த நேரத்தில் தேதி இல்லாமல் போனதால், வேறு ஒரு நடிகரைக் கேட்டோம். அவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் படத்தில் கதாநாயகனுடன் வரும் மற்றொரு கதாபாத்திரம் இறப்பதுபோல் படம் இருக்கும். அந்த நடிகரோ, ‘நான் இறப்பது போல் இருந்தால்தான் நடிக்க முடியும்’ என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தை சரியாக வராததால் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணினோம். அப்போது எங்கள் நினைவுக்கு சட்டென வந்தவர் கேப்டன் விஜயகாந்த்.

அவர் மிகுந்த வேலைப்பளுவுடன், பரபரப்பாக இயங்கி நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. உண்மையைச் சொல்வதென்றால், எங்களுக்கு கொடுக்க அவரிடம் கால்ஷீட் இல்லை. ஆனாலும் ஏவி.எம். என்ற பெரிய நிறுவனத்தை மனதில் கொண்டும், எங்கனின் அன்பு வேண்டுகோளைத் தட்ட முடியாமலும் ‘சரி..’ என்று ஒப்புக்கொண்டார்.

அதிகம் படித்தவை:  கடந்த வார பாக்ஸ் ஆபீஸ் வசூலில் யார் முதலிடம்?

1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி ‘சிவப்பு மல்லி’ திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. ஆகஸ்டு 15-ந் தேதி படத்தை வெளியிட வேண்டும். இடையில் வெறும் 56 நாட்களே இருந்தன. அதில் 35 நாட்கள் படப்பிடிப்பு.. இதர பணிகளுக்கு மீத நாட்கள் என்று திட்டமிட்டு செயலாற்றத் தொடங்கினோம்.
அந்த நேரத்தில் விஜயகாந்த், பி.எஸ்.வீரப்பாவின் ‘சாட்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்து நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜயகாந்த் இருந்தார். எங்களுடைய படப்பிடிப்பு மதுராந்தகத்தில் இருந்தது. இருப்பினும் தினமும் சேலத்தில் ‘சாட்சி’ படப்பிடிப்பு மாலையில் முடிந்ததும், காரில் கிளம்பி நாங்கள் ‘சிவப்பு மல்லி’ ஷூட்டிங் வைத்திருந்த மதுராந்தகத்திற்கு வந்து விடுவார். கொஞ்சம் கூட அலுப்போ, சலிப்போ இல்லாமல் இரவு முழுவதும் நடித்து விட்டு, அதிகாலையில் சேலத்துக்கு கிளம்பி விடுவார். சில நேரங்களில் சேலம் படிப்பிடிப்பைக் கூட அட்ஜெஸ்ட் செய்து கொண்டு, எங்களின் படத்தில் பகலிலும் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். அவர் ஒத்துழைப்பு கொடுத்த விதம் எங்கள் யூனிட்டையே அசர வைத்தது.

‘சிவப்பு மல்லி’ படத்தில் விஜயகாந்த் – அருணா


அதற்கு ஈடுகொடுத்து இரவு, பகல் பார்க்காமல் எடிட்டர் வெள்ளைச்சாமியுடன், இயக்குனர் ராமநாராயணனும் மிகக் கடுமையாக உழைத்தார். ‘சிவப்பு மல்லி’ திரைப்படம் 15-8-1981-ல் வெளியாகி, பல ஊர்களில் மிகப் பெரிய கலெக்‌ஷனைப் பெற்றுத் தந்தது. இயக்குனர் ராமநாராயணனுக்கும் இந்தப் படத்தின் மூலமாக நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தில் விஜயகாந்துடன் நடிகர் வாகை சந்திரசேகரும் கனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் சிறந்த நடிகர்; நல்ல மனிதர்.

விஜயகாந்த் மற்றும் வாகை சந்திரசேகர் இருவரின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போயிருந்தால், எங்களால் ‘சிவப்பு மல்லி’ திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் வெளியிட்டிருக்கவே முடியாது. ‘டெடிகேஷன்’ என்ற வார்த்தையை எழுதி, அதற்கு அர்த்தமாக அதன் எதிரே விஜயகாந்த் என்று பொறித்து வைக்கலாம். அப்படி ஒரு உழைப்பாளி.

அதிகம் படித்தவை:  விஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்தின் சில நிமிட காட்சிகள்.!

அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற போது, கோடிக்கணக்கில் கடன் இருந்தது. அந்த சங்கம் தனது அனைத்து கடன் களையும் அடைத்து, இன்று ஒரு ‘கார்ப்பஸ் பண்ட்’டை நிறுவியுள்ள அளவுக்கு வளர்ச்சி பெற்று திகழ்வதற்கான பெருமை விஜயகாந்தையே சாரும்.

வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகளுக்காக அவர் ஒரு நட்சத்திர பட்டாளத்தையே வெற்றிகரமாக அழைத்துச் சென்று வந்ததை அனைவரும் அறிவார்கள். அதிலும் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற இருபெரும் நடிகர்களை அழைத்துப் போய் வருவது என்பதற்கு துல்லியமான திட்டமிடல், சிக்கல் இல்லாத செயல்பாடு போன்றவை மிகவும் அவசியம்.

விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 25-ந் தேதியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. ஏனென்றால் அன்றுதான் என்னுடைய மகன் குகனுக்கும் பிறந்த நாள்.

வைர எழுத்து கொண்ட வைரமுத்து – கவிப்பேரரசு வைரமுத்து

ஏழாவது முறையாக தன்னுடைய கவி எழுத்துக்கு தேசிய விருது பெற்றிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் எங்கள் நிறுவனத்திற்கு பாடல்கள் எழுத வந்தது ‘சிவப்பு மல்லி’ திரைப்படத்தில்தான். அவரை எங்களிடம் பரிந்துரை செய்தவர் இயக்குனர் ராமநாராயணன். ‘புதியதாக ஒரு கவிஞர் வந்திருக்கிறார். நன்றாக எழுதுகிறார்’ என்று கூறி அழைத்து வந்தார். இந்தப் படத்தில் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்தன. அதிலும் ‘மே தினம்’ பற்றிய பாடல் உயிர்ப்பு மிகுந்ததாக, அனைவரின் உணர்வுகளையும் தட்டி எழுப்புவதாக இருந்தது.

‘சிவப்பு மல்லி’ படத்தில் பாடல்கள் எழுதியதோடு, வசனங்களில் கூட சில இடங்களில் கவிஞர் வைரமுத்து சில திருத்தங்களை செய்து கொடுத்தார். எங்கள் நிறுவனத்துக்குத்தான் வைரமுத்து அதிகமான பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்ற பெருமையும் எங்களுக்கு உண்டு. ‘சிவப்புமல்லி’ திரைப்படம் மூலமாக எனக்கு அறிமுகமான கவிப்பேரரசு வைரமுத்து, இன்று என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருக்கிறார்.