விட்டுக்கொடுத்து கெட்டுப்போகாத சிவகுமாரின் 7 ஹிட் படங்கள்.. 100வது படத்திற்கு கிடைத்த வெற்றி

1965ல் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அவரைப் போன்றே அவரது இரண்டு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கின்றனர். சிவக்குமார் நடித்த எல்லா படங்களிலும் தியாகம் செய்துவிடும் தியாகியாகவே காட்டுவார்கள். அப்படி அவர் நடித்து பெயர் வாங்கிய 7 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

பசும்பொன்: பாரதிராஜா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விதவையாக இருக்கும் ராதிகாவை 2வது திருமணம் செய்து கொண்டு அவருக்கு வாழ்க்கை கொடுக்கும் மகானாக சிவக்குமார் நடித்திருப்பார். இரண்டாவது கணவர் என்ற குறையை சிறிதும் ராதிகாவிடம் காட்டாமல் அவருடன் அன்பான கணவராக இந்தப் படம் முழுவதும் வாழ்ந்திருப்பார்.

சக்தி: 1997 ஆம் ஆண்டு வினித், யுவராணி நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் சிவக்குமார்-ராதிகா இருவருக்கும் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தை தரித்தது விடுகிறது. இதை அறிந்த கிராமத்தின் தலைவர் ராதிகாவை ஊரை விட்டு ஒதுக்கி ஒரு குடிசையில் தனிமை படுத்துகின்றனர். ஆனால் அந்த குழந்தைக்கு அப்பா சிவகுமார் என்பதை ராதிகா வெளிப்படுத்த மாட்டார்.

பிறகு ராதிகாவை விட்டு அந்த குழந்தையை பிரித்து வேறு ஊரில் வளர்க்க ஊர் தலைவர் சொல்கிறார். அந்த சமயம் சிவகுமாருக்கு வற்புறுத்தலின் பெயரில் விஜியுடன் திருமணம் நடக்கிறது. பல வருடத்திற்கு பிறகு அந்த குழந்தை வளர்ந்த கதாநாயகனான வினித், ராதிகாவை சந்திக்கிறது. அதன்பிறகு சிவக்குமார் தான் தன்னுடைய தந்தை என்ற உண்மையையும் தெரிந்து கொள்கிறார். ஆனால் கடைசிவரை சிவக்குமார் ஒரு குற்றவாளி ஆகவே இந்த படத்தில் காட்டப் படுவார்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி: 1979 ஆம் ஆண்டில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகுமார், தீபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நாகரீகம் எட்டிப்பார்க்காத கிராமத்தில் வெற்றிலை விற்பனை செய்யும் கள்ளங் கபடமற்ற இளைஞர் செம்பட்டையாக சிவகுமார் இந்தப் படத்தில் அப்பாவியாக நடித்திருப்பார்.

இதில் செய்யாத குற்றத்திற்காக அவருடைய அறியாமையை வைத்தே ஊர் பஞ்சாயத்து தர்ம அடி கொடுத்து, பழி போட்டதால் மனமுடைந்து வீட்டிற்குள் சென்ற செம்பட்டை, தன்னுடைய மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை பார்த்து உயிரை விடுகிறார்.

இந்தப்படத்தில் போலியான நாகரிகம் எப்படி கிராமத்தின் வாழ்க்கைமுறையை தடம் புரட்டிப் போட்டது என்பதை சிவக்குமார் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். சிவகுமாரின் 100வது படமான இந்தப் படம்தான் அவரின் நடிப்பிற்கு பேர் சொல்லும் படங்களில் முதலிடம் பிடித்தது.

பாசப்பறவைகள்: 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவகுமாருக்கு தங்கையாக ராதிகாவும், மனைவியாக லஷ்மியும் நடித்திருப்பார்கள். மோகன் இந்தப் படத்தில் ராதிகா கணவராக நடித்திருப்பார். மோகன் இறப்பிற்கு சிவகுமார்தான் காரணம் என வழக்கறிஞரான ராதிகா நீதிமன்றத்தில் பாசமாக வளர்த்த அண்ணனை நிற்க வைத்து கேள்வி கேட்பார்.

செய்யாத குற்றத்திற்காக கூண்டில் ஏற்றிய தங்கையிடமிருந்து கணவரை காப்பாற்றுவதற்காக லஷ்மி ராதிகாவிற்கு எதிராக கோர்ட்டில் வாதாடுவார். இருப்பினும் சிவக்குமார் இந்தப்படத்தில் ஆசையாசையாய் வக்கீல் ஆக்கிய தங்கையிடமே வீண் பழிச் சொற்களை கேட்கும் அண்ணனாக பாவப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து படத்தை பார்ப்போரை உருக வைத்திருப்பார்.

வாட்ச்மேன் வடிவேலு: 1994 ஆம் ஆண்டு ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிவகுமார், சுஜாதா, ஆனந்தபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து தனது மகன் ஆனந்தபாபுவை வளர்த்து ஆளாக்குவார் சிவகுமார். ஒரு கட்டத்தில் மகன் காதல் திருமணம் செய்து கொண்ட பணக்கார வீட்டிற்கு வீட்டோட மாப்பிள்ளையாக சென்றுவிடுவார்.

பெற்ற தாய் தந்தையை கொஞ்சம்கூட கண்டுகொள்ளாத ஆனந்த பாபுவிடம் சிவகுமார் தன்னுடைய மனைவி சுஜாதாவின் ஆபரேஷனுக்காக 3 லட்சம் பணம் கேட்பார். ஆனால் அதை கொடுக்க மறுக்கும் ஆனந்தபாபுவை நீதிமன்றத்தில் நிற்க வைத்து இவ்வளவு வருடம் வளர்த்து ஆளாக்கியதற்காக ஆன செலவு 5 லட்சத்தை வட்டியும் முதலுமாக வாங்குவார். எந்த அடாவடியையும் வெளிக்காட்டாமல் ஒரு அப்பாவி தகப்பனாக இந்தப் படத்தில் சிவகுமார் நடித்து, பெற்ற பிள்ளைகள் பெற்றோருக்கு என்ன கடமைகளை செய்ய வேண்டும் என உணர்த்தியிருப்பார்.

பூவெல்லாம் உன் வாசம்: எழில் இயக்கத்தில் அஜித்குமார், ஜோதிகா, நாகேஷ், சிவகுமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இதில் அஜித்துக்கு அப்பாவாக சிவகுமார் நடித்திருப்பார். நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இரண்டு குடும்பத்தினரிடம் அஜித்-ஜோதிகா திருமணத்தினால் சண்டை ஏற்படுகிறது.

அந்த இடத்தில் சிவகுமார் ஆத்திரப்படாமல் தன்மையுடன் தந்தையாகவும், நண்பராகவும், குடும்பத் தலைவராகவும் பொறுப்புடன் நடந்துகொண்டு பிரச்சினையை சரிக்கட்ட பார்ப்பார். ஒரு கட்டத்தில் பிரச்சனை சரியானதும் சிவக்குமார் அணுகுமுறைதான் குடும்பத்தை சேர்த்து வைக்க முக்கிய காரணமாக இருக்கும்.

கண்ணுபட போகுதய்யா: விஜயகாந்த், சிம்ரன், கரண், சிவகுமார், லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்தில் அண்ணன் விஜயகாந்த் காதலிக்கும் சிம்ரனை தம்பி கரணுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதற்கு முழு காரணம் தம்பி ஆசைப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், சிவகுமார்-லட்சுமி இருவரின் தவறான முடிவாகவே படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால் அண்ணன் இருக்கும்போது தம்பிக்கு திருமணம் செய்து வைப்பது தான். ஒரு கட்டத்தில் கரண்க்கு, விஜயகாந்த்-சிம்ரன் காதல் தெரிந்ததும் அவருடன் சண்டையிடுவார். விஜயகாந்த் வீட்டை விட்டு வெளியேற, கரணிடம் சிவகுமார் இவ்வளவு நாள் மறைத்து வைத்த உண்மையை போட்டு உடைக்கிறார். இந்த சொத்துசுகத்திற்கு எல்லாம் விஜயகாந்த் தான் சொந்தக்காரர். அவருக்கு காவலாளிகள் தான் நாம் அனைவரும் என எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். அந்த இடத்தில் தந்தையாகவும் வளர்ப்பு தகப்பனாகவும் சிவகுமார் கண்ணியமாக நடந்து கொள்வார்.

இவ்வாறு சிவக்குமார் நடித்த படங்களில் பெரும்பாலும் அவரை தியாக செம்மல் ஆகவே காட்டியிருப்பார்கள். அந்தக் கதாபாத்திரமும் அவரைத் கச்சிதமாக பொருந்தியதால் தொடர்ந்து அப்படிப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக மாறினார்.

Next Story

- Advertisement -