சமூக வலைதளங்களில் தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதாக நடிகர் ரோபோ சங்கர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம், வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’, சந்தானத்துடன் ‘சக்க போடு போடு ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

Robo Shankar-Pawan Kalyan
Robo Shankar

பொதுவாக, நடிகர் – நடிகைகள் என்றாலே ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், அவர்களின் பெயர்களில் ஏகப்பட்ட அக்கவுண்ட்கள் இருக்கும்.

பெரும்பாலும் அது சம்பந்தப்பட்ட நடிகர்களுக்குப் பெருமையாக இருந்தாலும், சில நேரங்களில் வினையாக முடிந்துவிடுவதும் உண்டு. அப்படியாப்பட்ட சிக்கலில் அடிக்கடி மாட்டி வருகிறார் ரோபோ சங்கர்.

ரோபோ சங்கர் பெயரில் ட்விட்டரில் நான்கைந்து அக்கவுண்ட்கள் உள்ளன. இவற்றில், சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு, ரோபோ சங்கரை சிக்கலில் மாட்டிவிடுகின்றனர் அந்த அக்கவுண்ட்களைப் பயன்படுத்துபவர்கள்.

robo shankar

ஒருமுறை பத்திரிகையாளர்களை சூர்யா ஏதோ சொல்ல, அவர் சொன்னது சரிதான் என ரோபோ சங்கர் பெயரில் உள்ள அக்கவுண்ட்டில் வக்காலத்து வாங்கி எழுத, பத்திரிகையாளர்களின் கண்டனத்துக்கு ஆளானார் ரோபோ சங்கர்.

அது தன்னுடைய அக்கவுண்ட் இல்லை என்று அவர் விளக்கம் தந்த பிறகே பிரச்னை தீர்ந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மாட்டுக்கறி பற்றி ஒரு கருத்து வெளியாக, ரோபோ சங்கரை எல்லோரும் திட்டித்தீர்க்க ஆரம்பித்தனர். ‘அது தான் இல்லை’ என்ற விளக்கம் கொடுத்தார் ரோபோ சங்கர். அத்துடன், இந்தச் சிக்கல் தீரவில்லை.

robo shankar

நெல்லையில் கந்துவட்டி பிரச்னை காரணமாக நேற்று குடும்பத்துடன் தீக்குளித்த புகைப்படங்களை வெளியிட்டு, ‘புகைப்படம் எடுப்பதை விட்டுவிட்டு அவர்களைக் காப்பாற்றி இருக்கலாமே…’ என்று பதிவிடப்பட்டிருந்தது.

இதனால், பத்திரிகையாளர்களின் கோபத்துக்கு மீண்டும் ஆளாகியிருக்கிறார் ரோபோ சங்கர்.

இப்படி சமூக வலைதளங்களில் தன் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், தன் பெயரைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோபோ சங்கர் தற்போது புகார் அளித்துள்ளார்.