தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளாகவே தடைப்பட்டு கிடக்கிறது. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மதுரையில் மட்டும் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போராட்டம், இப்போது தமிழகம் முழுக்க வெடித்திருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் களமிறங்கிய பின்னர் போராட்டம் அதி தீவிரமாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக சினிமாக்காரர்களும் குரல் கொடுத்து வருவதோடு ஜிவி பிரகாஷ், அமீர், கவுதமன், மன்சூரலிகான், மயில்சாமி உள்ளிட்டோர் நேரடியாக களத்திலும் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது ஆதரவை தெரிவித்து இருந்த ராகவா லாரன்ஸ், சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்…

தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஜல்லிக்கட்டு விஷயத்தில் இப்போதே பாதி வெற்றி பெற்றுவிட்டோம். விஜய், சிம்பு உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்துள்ளனர். இந்த போராட்டம் பற்றி நேற்று எனக்கு ஒரு செய்தி வந்தது. அதில், போராட்டாக்காரர்களுக்கு தண்ணி, சாப்பாடு, மருத்துவ வசதி போன்றவைகள் இல்லாமல் இருப்பதாக அறிந்தேன். மழை வெள்ளம் வந்தபோதே உதவி செய்தோம், இதற்கு செய்யமாட்டோமா… போராட்டாக்காரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன். ஒரு கோடி செலவானாலும் நான் தருகிறேன். இப்போது நான் சென்று இங்குள்ளவர்களுக்கு தேவையான சாப்பாடு, உணவு, மருத்துவ வசதிகளை கொண்டு வர செல்கிறேன். இதேப்போன்று பல்வேறு ஊர்களில் போராடுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். மாணவர்கள் என்றால் ஆக்ரோஷக்காரர்கள், வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சொல்வார்கள், ஆனால் அது பொய் என்பதை நிரூபித்து அமைதியாக போராட்டம் நடத்துகிறார்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் முடிவு எடுக்காவிட்டால் இதன் விளைவு எந்தமாதிரி இருக்கும் என்று தேர்தல் நேரத்தில் அவர்களுக்கே தெரியும். இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.