அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் ராதாரவி மீண்டும் திமுகவுக்கு திரும்ப உள்ளார். விரைவில் தாம் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்கப் போவதாகவும் ராதாரவி அறிவித்துள்ளார்.

திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் நடிகர் ராதாரவி. பின்னர் அதிமுகவில் இணைந்த அவரை எம்.எல்.ஏ.வாக்கினார் ஜெயலலிதா.

2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக ராதாரவி அறிவித்தார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். டெல்லியில் ராகுல் காந்தியையும் சந்தித்தார்.

ஆனால் திடீரென 2010-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி. தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

ஸ்டாலினுடன் ஒரே மேடையில்

இந்த நிலையில் பழனியில் நடிகரும் திமுக நிர்வாகியுமான வாகை சந்திரசேகர் மகள் திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் ராதாரவி பேசியதாவது:

தற்போது நான் எந்த தலைமையையும் கொண்டவனாக இல்லை. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்.

எனது சித்தப்பாவாக கருதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற்று குணமடைவார். அவரை சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன்.

இங்கு பேசியவர்கள் அனைவரும் ஸ்டாலினை முதல்வராக வரவேண்டும் என்றார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கான தகுதியும் ஸ்டாலினிடம் உள்ளது.

இப்போது நல்ல எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றுகிறார். சிலர் இங்க எப்ப வருவீங்க, வருவீங்க என கேட்கின்றனர். அதற்கான நேரம் வந்தால் வந்துவிடுவோம். இவ்வாறு ராதாரவி பேசினார்.