Prabhu Deva_HBD

இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகர், நடன அமைப்பாளர்,இயக்குனர், தயாரிப்பாளராக இருப்பவர் நடிகர் பிரபுதேவா, இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் முகூர் சுந்தர் ( சுந்தரம்) என்பவருக்கும், மகாதேவம்மாவிற்கும் மகனாக கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி பிறந்தார்.

இவருடைய இயற்பெயர் சங்குபாணி, இவரது தந்தை தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனரில் ஒருவராக இருந்ததால் அவர்கள் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது.

அண்ணன் ராஜு சுந்தரம் மற்றும் தம்பி  நாகேந்திர பிரசாத் உடன் சென்னை வந்தார். இந்தியப் பாரம்பரியக் கலைகளில் ஆர்வம் கொண்ட பிரபுதேவா பரதநாட்டியம் கற்க ஆரம்பித்தார்.அதனை தொடர்ந்து மேற்கத்திய நடனக்கலையிலும் தேர்ச்சிப்பெற்றார்.

1988 ம் ஆண்டு ‘அக்னி நட்சத்திரம் படத்தில் தனது தந்தை சுந்தரம் நடனம் அமைத்த  ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலில் குருப்பில் ஆட ஆரம்பித்தார். 1989 ம் ஆண்டு கமல்-பிரபு நடித்த வெற்றிவிழா படத்தில்  தன்னுடைய முதல் படத்திற்கு நடனம் அமைத்தார் பிரபுதேவா.

அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணிபுரிந்து இந்தியாவின் நடனப்புயலாக மாறி வேகமாக நடனமாடி இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1994 ம் ஆண்டு பவித்திரன் இயக்கத்தில் வெளியான இந்து திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமாகினார். அதே ஆண்டில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

வரிசையாக ராசையா, லவ் பேட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, டைம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ்,மனதைத் திருடிவிட்டாய்,ஒன்டூ த்ரி, அலாவுதீன், எங்கள் அண்ணா, தேவி, போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது யங் மங் சங் படத்தில் லட்சுமி மேனன் உடன் நடித்து வருகிறார். தோட்டிகாம் (தெலுங்கு), அக்னி வர்ஷா (தெலுங்கு),  சுக்காலோ சந்டுரு (தெலுங்கு), ஸ்டைல் (தெலுங்கு), ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். 2006ல் பௌர்ணமி,2007ல் போக்கிரி, சங்கர்தாதா சிந்தாபாத்,2009ல் வில்லு,வான்டட்,2011ல் எங்கேயும் காதல்,வெடி,2012 ரவ்டி ரதோர்,2013ல் ராமையா வஸ்தாவையா,ஆர்.ராஜ்குமார், 2014 ஆக்சன் ஜாக்சன் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

பிரபுதேவா ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்குப் பிறகு ‘ரமலத்’ என்ற பெயரை ‘லதா’ என்று மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்த மகன் 2008 ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். நயன்தாரா ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்.

சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதுகளை தமிழில் மின்சார கனவு படத்திற்கும், இந்தியில் லக்ஸ்ஷயா படத்திற்கும் அவருக்கு வழங்கப்பட்டது.

நடிகர் பிரபுதேவாவை  நம் கண்முன்னால் நிறுத்தும் பாடல்கள் 

ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே,

காதலன் படத்தில் முக்காலா முக்காபலா,

மின்சார கனவு படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே,

அக்னி நட்சத்திரம் படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா,

ஏழையின் சிரிப்பிலே படத்தில் யப்ப யப்ப அய்யப்ப கண்ணுல காச காட்டப்ப

சூரியன் படத்தில் லாலக்கு டோல் டப்பிமா,

இந்து படத்தில் எப்படி எப்படி சமஞ்சது எப்படி

என கூறிக்கொண்ட போகலாம் இந்திய சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது மிகையாகாது.இன்று அவரின் பிறந்த நாள் அவருக்கு லைவ்டே சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.