MRRadha_CP

அன்றைய காலகட்டத்தில் முற்போக்காகவும், நகைச்சுவையாகவும் நடித்து அனைவரது மனங்களில் நிலைத்து நின்றவர் நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

அவரது இயற்பெயர் மதராஸ் ராஜகோபாலன் ராதாகிஷ்ணன். அதனை சுருக்கமாக எம்.ஆர்.ராதா என்றழைக்கப்பட்டார். எம்.ஆர்.ராதாவை சர்ச்சை நாயகன் என்றே கூறலாம். அந்தளவுக்கு அவரது வாழ்க்கை பல்வேறு சர்சைகள் அடங்கியது.

சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. ‘நான் ஓர் அநாதை’ என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம்.

சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா,- நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான். ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன.

ப்ளைமௌத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ‘நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?’ என்று கேட்டவர்.

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். ‘நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்’ என்று அதில் எழுதிவைப்பார்.

எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா’ என்றும், சிவாஜியை ‘கணேசா’ என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடா என்றுதான் அழைப்பார். என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்’ என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா.

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. ‘நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?’ என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தவர்.

‘நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?’ என்று கேட்டபோது. ‘எதிர்ப்பில் தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் ‘என்றார்!

மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர். ‘நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்’ என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்.

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். ‘ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர். அதனால ஏத்துக்கிறேன்’ என்று அங்கும் கர்ஜித்தார் ராதா.

”தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்” என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்.