நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கொண்டாடிய மதுரையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியின் மனு மீதான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு குறித்து நடிகர் தனுஷின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா அவரது மனைவி விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தங்கள் பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

முதலில் நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில்,

வெங்கடேஷ் பிரபு (தனுஷ்) எங்கள் மகன்தான் என்பதை உறுதி செய்ய வைத்ததே கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் கொடுத்த ஆதாரம் தான். கதிரேசன் மீனாட்சி தம்பதிகள் தங்கள் மகன் தனுஷ் என கூறி வந்தனர்.

கதிரேசன் மீனாட்சி தம்பதியினரின்  மகன் ( கலையரசன்) கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் காணாமல் போனதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். தனுஷ் தங்கள் மகன் என நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

நான் 2002ம் ஆண்டில் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பை முடித்து அதன் தணிக்கை சான்றிதழ் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் பெறப்பட்டது. படமும் மே மாதம்  ரிலீஸ் ஆனது. அப்படி இருக்கும்போது தனுஷ் எப்படி அவர்களது மகனாக இருக்க முடியும்? அந்த தேதியில் அவர்களுடைய மகன் வீட்டில் இருந்ததாகத்தான் கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் தெரிவிக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  ஆதரவு தந்தவரையே அசிங்கபடுத்திய ஜுலி- அதிர்ச்சியில் ரசிகர்கள்

தனுஷ் எங்கள் மகன் என்பதற்கான சரியான ஆதாரம் எங்களிடம் இருந்ததால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தோம். அப்படி இருக்கும்போது இந்த விஷயத்திலும் எது உண்மை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருந்தோம். தற்போது சரியான தீர்ப்பு கிடைத்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

தனுஷ் ஒரு நடிகன். அவன் முன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயங்களும் செய்தியாக வருகிறது. எங்களை விட தனுஷுக்கு எதையும் எதிர் கொண்டு மேலே வரும் மனப்பக்குவம் மிகவும் அதிகம். ஆகையால் நாங்கள் காத்திருந்தோம்  என்றார் கஸ்தூரி ராஜா.

தனுஷ் தாயார் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா கூறுகையில் “தான் சுமந்த பிள்ளையை தன் பிள்ளை என மற்றவர்கள் சொல்வது ஒரு தாய்க்கு எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கும் என்பதை நான் கடந்த 8 மாதங்களாக சுமந்தேன். வெங்கடேஷ் பிரபு( தனுஷ்) பிறந்த சென்னை, எழும்பூர் மருத்துவமனை மருத்துவரே விஷயத்தை கேள்விப்பட்டு, ‘வாங்க போவோம். நான் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி சொல்கிறேன்’ என்றார்.

அதிகம் படித்தவை:  ராய் லக்ஷ்மி-சினிமாவிற்கு வரமால் இருந்திருந்தால் நான் இதுவாக தான் ஆகியிருப்பேன்

இந்த மாதிரி விஷயத்தை கேள்விப்பட்டு ஒவ்வொருவரும் என்னிடம் கேட்கும்போது எனக்கு வலி அதிகமாக இருந்தது. பெற்ற வயிறு கலங்கியது.கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம். நாங்கள் நீதிக்கு மதிப்பளித்தோம். இன்று உண்மை ஜெயித்துள்ளது.

தனுஷ் அப்பா (கஸ்தூரி ராஜா) நீதிமன்றதுக்கு போனபோதுகூட நான் பெரிதாக வருத்தப்படவில்லை. ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசம் நீதிமன்றத்தில் நடந்தது தான் எனக்கு வருத்தமாக இருந்தது. தனுஷுக்கு விமரிசையாக திருமணம் செய்தபோது தேடி வராதவர்கள், கையில் அடிப்பட்ட செய்தி நாளிதழ்களில் வந்தபோது தேடி வராதவர்கள், இப்போது தேடி வந்ததன் நோக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெளிவாக புரிந்திருக்கும்.

இந்த நேரத்தில் ஊடகங்களுக்கும் எங்களுக்கு அளித்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். யார் மீதும் நாங்கள் தப்பு சொல்லவில்லை இனிமேலாவது அவர்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ளட்டும் என்றார்.