யார் இந்த கேப்டன் மில்லர்.. தனுஷ் அடுத்த படத்தின் கதை

கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவனின் நானே வருவேன், மித்ரன் ஜவஹரின் திருச்சிற்றம்பலம், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி உள்ளிட்ட 3 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

இதில் திருச்சிற்றம்பலத்தில் ஆடியோ லான்ச் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதைத் தொடர்ந்து சாணிக்காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.

இதில் கேப்டன் மில்லர் யார் என்ற கேள்வி பலருக்கு தோன்றுகிறது. வல்லிபுரம் வசந்தன் என்பவர்தான் கேப்டன் மில்லர் என அழைக்கப்படுகிறார். யாழ்ப்பாணத்தில் பிறந்த வசந்தன் கல்லூரியில் படிக்கும்போது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து யாழ்ப்பாண மக்களுக்காக போராடினார்.

அந்த இயக்கத்தின் முதன்மை படையான கரும்புலி என்ற பிரிவின் கீழ் நாட்டுப்பற்றுடன் செயல்பட்டதால் அங்கிருப்பவர்கள் இவரை செல்லமாக மில்லர் என அழைக்க, அதன்பிறகு அவரது பெயர் கேப்டன் மில்லர் என மாறியது. இலங்கையில் வடமராட்சி என்ற இடத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் வசந்தன் தன்னுடைய உயிரையே கொடுத்திருக்கிறார்.

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உள்ள இராணுவ முகாமிற்குள் மில்லர் வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரக் வண்டியை செலுத்தி வெடிக்க வைத்து அவரும் இறந்துவிடுகிறார். அவர் இறக்கும்போது 40 ராணுவ வீரர்களை கொன்று விட்டு இறக்கிறார். அந்த சமயம் 240 கரும்புலிகளுக்கு முன்னால் சென்று தைரியமாக நின்று ராணுவத் தளத்தை அழித்து மில்லர், 240 பேருக்கு கேப்டனாக மாறினார்.

இவர் இறந்த பிறகு அந்த 240 கரும்புலிகளும் போரை முன்னெடுத்துச் சென்று போரில் வெற்றி கண்டனர். இவ்வாறு தற்கொடை போராளிகளாக இந்தப் படையை முன்னெடுத்துச் சென்ற கேப்டன் மில்லர் இறந்த ஜூலை 5 ஆம் தேதியை கரும்புலிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர். மேலும் அவர் வெடிக்கச் செய்த ராணுவ முகாம் இருந்த இடமான நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கேப்டன் மில்லருக்கு 2002 ஆம் ஆண்டு சிலை வைத்தனர்.

இப்படி உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் போராளியான கேப்டன் மில்லர் கதையில் தனுஷ் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகையால் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கப்பட்டு வரும் ஜனவரி வரை தொடர்ந்து நான்கு மாதங்கள் படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்