News | செய்திகள்
என்னாது, பேச வராதா? டி.டி.யை கலாய்த்த தனுஷ்
நடிகர் தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம், ‘பவர் பாண்டி’. இதன் டைட்டில் இப்போது ’ப.பாண்டி’ என மாற்றப்பட்டிருக்கிறது. ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி, சாயாசிங், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் டி.டி என்கிற திவ்யதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது மேடையில் பேசுவதற்காக, டி.டியை, நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இயக்குனர் சுப்ரமணிய சிவா, அழைத்தார். மைக்கைப் பிடித்த டி.டி, ’எனக்கு அவ்வளவா பேச வராது’ என்று சொல்ல, மேடையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். பலத்த சிரிப்புக்கிடையே, ’என்னாது, பேச வராதா?’ என்று தனுஷ் கலாய்க்க, ‘இல்ல, இந்த மாதிரி விழாக்கள்ல நான் பேசி பழக்கமில்லை. அதைச் சொன்னேன்’ என்றார் டி.டி. இன்னும் சிரித்தது மேடை.
தனுஷ் பேசும்போது, ’வாழ்க்கையில் அன்பு, நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இதில் பாஸிட்டிவ் விஷயங்களை அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வதுதான் இந்தப் படம். இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் சொல்லும் விஷயம், ’ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்’ என்பது. ப .பாண்டி தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக் கொண்டது’என்றார்.
