fbpx
Connect with us

செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது : சாதிக்கட்டும் மாணவர் படை

News | செய்திகள்

செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது : சாதிக்கட்டும் மாணவர் படை

தங்கமே மூச்சு விட்டுக்கொள். எந்த புத்தகமும் எந்த பாசறையும் கற்றுத்தராத விலைமதிக்க முடியாத வாழ்க்கைப்பாடத்தை படித்திருப்பாய்.

முதலில் ஆதரவாகப்பேசிய குரல்கள் பிரபலங்கள் இப்போது பம்முவதைப்பார்த்திருப்பாய்.

உசுப்பேற்றிய தற்காலிக கதாநாயகர்கள் இப்போது அடக்கி வாசிப்பதை பார்த்திருப்பாய்.

பிரபலங்கள் என்ற வகை ஆட்கள் நீங்கள் தடியடி வாங்கும்போதும் ரத்தம் சிந்தும்போதும் கண்ணிலேயே படாத பாதுகாப்பான கூடாரங்களில் பதுங்கி இருந்ததை பார்த்திருப்பாய்.

போராட்ட நாட்களில் மெல்லிய புன்னகையுடன் சாப்பாடு பெற்றுக்கொண்ட அதிகாரி இன்று நெஞ்சில் மிதிப்பதை பார்த்திருப்பாய்.

நான்கு வருடங்களாக நடக்காத விஷயத்தை நான்கு நாட்களில் முடிக்கும் அலாவுதீன் பூதமொன்று உயிருடன் இன்னும் இருப்பதையும் பார்த்திருப்பாய்.

உணவும் தண்ணீரும் கிடைத்தது போக இன்று கடலில் நனைந்தபடி பட்டினி கிடக்கும்போதும் கன்னத்துல சதை பிய்ந்து தொங்கும்போதும்.

வயிற்றில் பூட்ஸ்கால்களால் மிதிபடும் போதும் கண்முன்னே யாரோ செய்த தீவைத்தலுக்கு நீ கைதாகும்போதும்,கல்லால் ஒங்கி அடிவாங்கிய போதும் உணர்ந்திருப்பாய் அரசியல் என்றால் என்னவென்று.

சம்பந்தமே இல்லாத ஆட்கள் சௌகரியமான இடங்களில் அமர்ந்து கொண்டு உன்னைப்புறம்பேசவும் உன் வெற்றியில் பங்கு போடவும் அடிமட்டும் தனியே வாங்குவதையும் நினைத்து திகைத்திருப்பாய்.

யார் வந்து அரவணைத்தனரோ அவர்கள் வேறுமாதிரி முகம் காட்டுவதை பார்த்திருப்பாய்.

மத்தியஅரசு மாநில அரசு ஆளுநர் பிரதமர் நீதித்துறை அரசுத்துறை காவல்துறை ஊடகங்கள் அரசுசாரா நிறுவனங்கள் இன,மத,மொழி வியாபாரிகள் இவற்றைப்பற்றி புதிய அர்த்தங்கள் புரிந்திருக்கும்.

செல்லமே உலகம் பார்க்க ஒரு பாடம் எடுத்தாய். தந்தையோடு மகனும், பெண்ணோடு தாயும், பாட்டியும் நாட்கணக்கில் அமரச்செய்தாய். கட்சி புகழ் வெளிச்சம் தவிர்த்தாய். விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்தாய்.

தங்கமே மூச்சு விட்டுக்கொள். இத்தனை அனுபவத்துக்குப் பிறகு நீ எடுக்கும் அடி அத்தனையும் சிறப்பாகவே இருக்கும்.

இனியேனும் ஏமாறாதே. தெளிவான நோக்கங்களை கைக்கொள்.நீ இழப்பது எதுவும் சாதாரண விஷயங்களுக்காக இருக்கக்கூடாது.தடம் பதிக்கும் தடயத்துக்காகவே இருக்க வேண்டும்.

பெரியவர்கள் நாங்களும் கற்றுக்கொள்கிறோம் உன்னிடம் இத்தனை அருமையான போராட்டமுறைக்கு.

இழப்புக்களை மீறி இனி சிந்தித்து செயல்படு.உன் உயர்ந்த சிந்தனை திறமை திடம் எதுவும் வீணாகாமல் உருப்பெறும்படி வேண்டி நிற்கும் ஒரு தாயின் கடிதம் இது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top