நள்ளிரவு நேரம்…

மாநகரங்களில் வசிக்கும் ஏழைகள் உறங்க இடமில்லாமல் சாலை ஓர நடைபாதையில் பல இடையூறுகளுக்கிடையே உறங்கும் நேரம்…

பண வசதி உள்ளவர்களுக்கு கொண்டாட்டம் முடிந்து தூங்கும்நேரம்…

டெல்லியின் நேற்றைய நள்ளிரவு அனைவருக்கும் வழக்கம்போல கடந்திருக்கும். ஆனால், வீடு இல்லாத பாவத்தைத் தவிர வேறு எந்த பாவமும் அறியாத தங்களின் உயிரைப் பறிக்கும் என எதிர்பார்த்து படுத்திருக்க மாட்டார்கள் அந்த இருவரும்.

டெல்லி காஷ்மீரி கேட் பகுதியில் சாலை ஓர நடைபாதையில்       வீடில்லாத ஏழைகள் சிலர் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையில் ஓட வேண்டிய அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறியும் அதேவேகத்தில் ஓடியது..

உணவுக்காக மட்டுமே ஒரு நாள் முழுதும் உழைத்துவிட்டு மறுநாள் காலை உணவுக்கு எந்த வேலைக்குச் செல்லலாம் என்ற சிந்தனையுடன் தூங்கிக் கொண்டிருந்த அந்த ஏழைகளின் மேல் ஏறி அந்த கார் ஓடியது. இதில் இருவர் உயிரிழந்தனர். மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த காரை ஓட்டிய நபரைப் பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர் 12-ம் வகுப்பு மாணவர் என்பது தெரியவந்தது. 12-ம் வகுப்பு மாணவன் என்றபோது அவரிடம் ஓட்டுநர் உரிமம் இருப்பதற்கான வாய்ப்பில்லை.

நம்மிடம் கார் இருக்கிறது…. நம்ம பையன் தானே என அந்த மாணவனிடம் காரைக் கொடுத்ததால் இரண்டு உயிர்கள் பறிபோனதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

தாங்களும் வாகனங்களை வேகமாக ஓட்டாமல் பிள்ளைகளுக்கும் அதை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால் 2 உயிர்கள் தப்பியிருக்கும்.

இனியாவது இதுபோன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு சாலையோரங்களை வீடாக பயன்படுத்தும் ஏழைகளின் உயிரை பறிப்பதை நிறுத்த வேண்டும்.

சாலையோரங்களில் படுப்பவர்களுக்கு அடிப்படைத் தேவையான வீடுகளை அமைத்துத் தர வேண்டும். மழையிலும் குளிரிலும் வாடும் அவர்களுக்கு வீடுகளைக் கூட கட்டித் தரமுடியாத அளவிற்கு 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் ஆட்சி நடந்திருக்கிறது.

இதற்கு ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

நல்லதொரு முடிவு எடுங்கள்.. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முடிவு கட்டுங்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..