பானை உருண்டு பூனை தலையில் விழ… பூனை உருண்டு எலி தலையில் விழுந்தது போல ஒரே குய்யோ முய்யோ! இந்தப்பிரச்சனையில் தமிழ்நாட்டில் சிவனே என்று இருக்கும் வைரமுத்துவின் தலையும் உருள்வதுதான் ஐயகோ!

இந்த இன்டர்நெட், வாட்ஸ் ஆப் யுகத்தில் டைப் பண்ண தெரிந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகிவிட்டதை நல்லதா, கெட்டதா என்ற குழப்பத்துடன் கவனித்து வருகிறது தமிழுலகம். ஆனால் இங்கு போல தெருவுக்கு நாலு சங்கம். தொன்னைக்கு தொன்னை வெண்ணை என்ற நிலைமை மலேசியாவில் இல்லை. அங்கு முறையான ஒரு எழுத்தாளர் சங்கம் இருக்கிறது. அதற்கு அவ்வப்போது தேர்தல் வருகிறது. வெல்பவர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. அப்படியொரு சங்கத் தேர்தலில்தான் கவிப்பேரரசு வைரமுத்துவின் தலையை உருட்டுகிறார்கள்.

மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக ராஜேந்திரன் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முறையும் அவரே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மு.கணேசன் என்ற எழுத்தாளர் இப்போது போட்டியிடுகிறார். இந்த மு.கணேசனுக்கு ஆதரவாக குரல் எழுப்புகிறவர்கள் சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். அங்குதான் உருள்கிறார் வைரமுத்து.

இந்த ராஜேந்திரன் இதுவரை தலைவராக இருந்தபோதெல்லாம் அதிக பயன் பெற்றவர் வைரமுத்து மட்டும்தான். அவரது படைப்புகள் எல்லாவற்றையும் மலேசியாவில் சந்தைப்படுத்தி விற்பதில் மட்டுமே குறியாக இருந்திருக்கிறார் ராஜேந்திரன். ஒவ்வொரு முறையும் வைரமுத்துவை மலேசியாவுக்கு வரவழைப்பதும், அவருடன் சில விஐபிகளை போட்டோ எடுத்துக் கொள்ள வைப்பதும், அதற்கப்புறம் அவரது புத்தகங்களை பெருமளவில் அவர்கள் தலையில் கட்டுவதும் மட்டுமே ராஜேந்திரனின் வேலையாக இருந்திருக்கிறது. ஏன்… மலேசியாவில் நல்ல எழுத்தாளர்கள் இல்லையா? அவர்கள் படைப்புகளை விற்பதற்கு அக்கறை காட்டினால் என்னவாம்?

இவருக்கும் வைரமுத்துவுக்கும் இருக்கிற தொடர்பின் மூலம், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உதவியுடன் ராஜேந்திரன் ஏதோ பலன் பார்க்கிறார் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் சான்றோனின் அறிவே பொறுமையில்தான் இருக்கிறது என்பதை அறிந்தவர் போல இந்த விவகாரங்களில் மூக்கை நுழைக்கவே இல்லை வைரமுத்து.

அவருக்கு கணேசன் ஜெயித்து வந்தாலும் வளைக்கத் தெரியும்!