நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வராததும், அவரது ரசிகர்கள் இந்த போட்டியை புறக்கணித்ததும் பெரிய விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நட்சத்திர கிரிக்கெட் முடிந்ததும் தேனாம்பேட்டையிலிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது. இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென அஜீத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஒலித்ததாகவும், அதை விஷாலும், இன்னொரு நடிகர் சௌந்தர்ராஜாவும் (இவர் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தவர். தற்போது பல்வேறு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்) நிறுத்த சொன்னதாகவும் இன்று ஒரு ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இது சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சௌந்தர்ராஜாவிடம் கேட்டோம்.

சார்… இது அபாண்டமான குற்றச்சாட்டு. அப்படியெல்லாம் எதுவுமே நடக்கல. ஆலுமா டோலுமா பாடல் ஒலிக்கும் போது எங்களுடன் உட்கார்ந்திருந்த தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா சாருக்கு எதிரிலிருந்த எல்.இ.டி லைட் கண்களை உறுத்தியது. அந்த லைட் சுழன்று கொண்டேயிருந்ததால் அவரால் அங்கு நார்மலாக இருக்க முடியவில்லை. அந்த லைட்டை நிறுத்த சொல்லுங்க என்று அவர் சொன்னதும் நானும் விஷாலும் எழுந்து அந்த எல்.இ.டி லைட்டைதான் நிறுத்த சொல்லி சொன்னோம். இதை யாரோ தவறாக திரித்துவிட்டுட்டாங்க. கடந்த சில மாதங்களாகவே அஜீத் சாருக்கு எதிரா விஷால் சார் ஏதேதோ பேசறதா கதை கட்டி விட்றாங்க. இது திட்டமிட்ட சதி என்றார் கவலையோடு.

சரி… இந்த ஆங்கில நாளேட்டு செய்திக்கு அஜீத்தின் ரீயாக்ஷன் என்ன? அவர் தரப்பில் விசாரித்தோம்.

இன்று காலையிலேயே இது அஜீத்தின் காதுக்கு போய்விட்டதாம். அவர் கேட்ட ஒரே கேள்வி இதுதான்.

“அவங்க அப்படி சொல்லும்போது நீங்க யாராவது அங்க இருந்தீங்களா? உங்க காதால் அதை கேட்டீங்களா?”

இவர்கள் “இல்லை” என்று பதில் சொல்ல, “அப்படின்னா லீவ் இட்” என்று கூறிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டதாக சொன்னார்கள்.

மத்த விஷயங்களில் எப்படியோ? பல விஷயங்களில் அஜீத் கிரேட்தான்!