மொபைல் போன் வைத்து இருப்பவர்கள் அனைவரும், 2018ம் ஆண்டு பிப்வரி மாதத்துக்குள், அதை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், அந்த எண் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து, மொபைல் எண், ஆதாரை இணைக்க இன்னும் 5 மாதங்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஆதார், மொபைல் எண் இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை மத்திய அரசு நேற்றுபிறப்பித்துள்ளது.
தனியார் தொண்டு நிறுவனமான லோக்நிதி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்து இருந்தது. அதில், மொபைல் எண் வைத்திருப்பவர்களின் விவரங்கள் ஆதார் எண்ணுடன் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், அது பாதுகாப்பு குறைபாட்டுக்கு இட்டுச்செல்லும் என கோரிஇருந்தது.

இந்த ஆலோசனையை மத்தியஅரசும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டது. ஆனால், 100 கோடிக்கும் மேலான மக்கள் மொபைல் போன் பயன்படுத்திவரும் நிலையில், அதை ஆதார் எண்ணுடன் சரிபார்க்க நீண்டகாலம் தேவைப்படும் எனத் தெரிவித்தது. 90 சதவீதம் பேர் ப்ரீபெய்ட் இணைப்பை பயன்படுத்துவதால், சரிபார்க்கும் பணி சிக்கலாக இருக்கும் எனத் தெரிவித்தது.

இதையடுத்து, அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்த உத்தரவில், “ ஒருவர் தன்னுடைய ப்ரீபெய்ட் சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்ய வருகிறார் என்றால், அவரிடம் அவரின் சிம்கார்டு, ஆதார் உள்ளிட்ட விவரங்களை நிரப்பக்கோரும் படிவத்தை அளியுங்கள்.
அவர் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யவரும் போது அந்த நிரப்பப்பட்ட படிவத்தை கொண்டு வரச் செய்யுங்கள். அவ்வாறு 3 ரீசார்ஜ் வரை அந்த படிவத்தை அவர் நிரப்பித் தராவிட்டால், அந்த எண்ணுக்கு ரீசார்ஜ் செய்வதை நிறுத்துங்கள், துண்டியுங்கள்.அடுத்த ஓர் ஆண்டுக்குள் அனைத்து மொபைல் எண்களும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கவேண்டும். அவ்வாறு 2018-ம் ஆண்டு பிப்வரி மாதத்துக்குள் ப்ரீெபய்ட் எண் வைத்து இருப்பவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், அந்த எண்ணை துண்டிக்கலாம்”எனத் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ப்ரீ பெய்ட் சிம் வைத்து இருப்பவர்கள், தங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், அந்த எண் ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை தவறான தகவல்களைக் கொடுத்து, மொபைல் எண் பெற்று இருப்பவர்களைத் தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் எடுக்கப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.