Tamil Cinema News | சினிமா செய்திகள்
மகனுக்கு சபாஷ் போட்ட ஆஸ்கார் நாயகன்.. என்ன செய்தார் அப்படி?
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகன் அமீனை பாராட்டி போட்டு இருக்கும் ட்வீட் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நிறைய திறமை இருப்பவர்கள் அதிகம் பேச மாட்டார்கள் என்பதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அவர் பேசிய வார்த்தைகளை கூட எண்ணி விடலாம். ஆனால், அவரின் ஒவ்வொரு பாட்டும் லட்சக்கணக்கானவர்களை பேச வைத்துக் கொண்டு தான் இருக்கிறது. 1992ம் ஆண்டு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் மூலம் ரஹ்மானை மணிரத்னம் தான் அறிமுகம் செய்து வைத்தார். அன்று தொடங்கிய இவரின் பயணம் இன்று வரை ஓயாமல் சென்று கொண்டு தான் இருக்கிறது.
பெரும்பாலும், மீடியா வெளிச்சத்தில் சிக்காத ரஹ்மான் தன் குடும்பத்தையும் காட்ட மாட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பிறகு இந்து மதத்தில் பிறந்த ரஹ்மான், முஸ்லீம் மதத்திற்கு மாறினார். தொடர்ந்து, திரைத்துறையில் நல்ல இடத்தை பிடித்த போது மனைவி சைரா பானுவை கரம் பிடித்தார். இத்தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். மூத்த மகள் கதீஜா குரலை உங்களால் கண்டிப்பாக மறக்க முடியாது காரணம், எந்திரன் படத்தில் புதிய மனிதா பாடலை பாடியவர் அவர் தான்.
தொடர்ந்து, ஏ.ஆர்.அமீனும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் மௌலானா என்ற பாடலையும், ஆங்கிலத்தில் கப்பிள்ஸ் ரிட்ரீட் பாடலையும் பாடி இருக்கிறார். இப்பாடல்களை தொடர்ந்து, சச்சினின் வாழ்க்கை வரலாற்று படமான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸில் அமீன் பாடிய முதல் இந்தி பாடல் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. தந்தையை போல எல்லா மொழிகளிலும் பாடல் பாடி வருகிறார் 15 வயதாகும் அமீன்.
அமீன் தனது பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். அதில், ஏ.ஆர்.ரஹ்மான் தான் செம மகிழ்ச்சியில் இருக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், வாழ்த்துக்கள் அமீன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளாய். உனக்காக இந்த உலகம் காத்திருக்கிறது என பாராட்டி இருக்கிறார். வாழ்த்துக்கள் அமீன்!
