ஏழு வருஷத்தில் 71 மரணங்கள்; 18 தற்கொலைகள்: பயமுறுத்தும் புழல் சிறைச்சாலை நிலவரம்!

புழல் சிறைச்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் 71 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 18 தற்கொலைகளும் அடங்கும் என்ற அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த பிரம்மா என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினை தமிழக உள் துறையிடம் தாக்கல் செய்தார். அதில் அவர் கடந்த 2010-ஆண்டுக்குப் பிறகு தமிழக சிறைகளில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விபரங்களை கோரியிருந்தார்.

இந்த விபரமானது தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் தடுப்புக் காவல் கைதிகள் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவானது உள்துறையில் இருந்து சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டது.

அங்கு இருந்து சென்னை புழல் மத்திய சிறைச்சாலையிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே வழக்கறிஞர் பிரம்மாவுக்கு அனுப்பப்பட்டது. அதில்தான் கடந்த 2010-ஆம் ஆண்டு துவங்கி ஏழு ஆண்டுகளில் 71 மரணங்கள் புழல் சிறையில் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 18 தற்கொலைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இறந்ததாக கூறப்படும் 18 பேருமே வெவ்வேறு முக்கிய குற்ற வழக்குகளில் ஏ-1 எனப்படும் முதன்மை குற்றவாளிகள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அத்துடன் சிறைச்சாலையில் போதைப்பொருள்கள் பயன்பாடு, அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை ஆணையங்கள் தொடர்பான விபரங்கள் ஆகியவற்றையும் வழக்கறிஞர் பிரம்மா தனது மனுவில் கோரியுள்ளார்.

புழலைத் தவிர இதர சிறைச்சாலைகள் குறித்த தகவல்கள் தரப்படாததால், இந்த விவகாரத்தில் இன்னும் நிறைய மர்மங்கள் வெளியாகலாம் என்று நம்ப இடமுள்ளது.

Comments

comments