64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

2016-ஆம் ஆண்டிற்கான 64-வது தேசிய திரைப்பட விருதுகள், கடந்த மார்ச் 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் ஜோக்கர் திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றது. இதே படத்தில் ”ஜாஸ்மீனு” என்ற பாடலை பாடிய சுந்தரா ஐயர், சிறந்த பின்னணி பாடகர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதவிர சிறந்த பாடலாசிரியர் விருதை ’தர்மதுரை’ படத்திற்காக வைரமுத்துவும்,சிறந்த திரைப்படம் விமர்சகர் விருதிற்காக தனஞ்செயனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர சூர்யா நடிப்பில் வெளியான ’24’ படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருதும், அதே படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்த திரு, சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் 64-வது தேசிய சினிமா விருதுகள் அளிக்கும் விழா, டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

சிறந்த பாடகருக்கான விருதை பெறும் முன்னர், ஜாஸ்மினு பாடலை சுந்தரா ஐயர் விழாவில் பாடினார். இது தவிர ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடன அமைப்பாளர் விருதை ராஜு சுந்தரம் பெற்றார்.