இந்த ஆண்டில் உலகம் சந்தித்த 6 இயற்கை பேரழிவுகள்.. தென் தமிழகத்தை நிலைகுலைய செய்த கனமழை

Nature Disaster 2023: இந்த 2023 ஆம் வருடம் முடிவடைய இருக்கும் நிலையில் நிறைய சந்தோஷமான விஷயங்களை திரும்பிப் பார்த்து வருகிறோம். அதே நேரத்தில் இந்த வருடம் உலகம் சந்தித்த பேரழிவுகளை பற்றியும் சிந்திக்க வேண்டும். எத்தனையோ அதிசயமான விஷயங்களை நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் இயற்கைக்கு முழுக்க முழுக்க கேடு விளைவிக்கும் பழக்கங்கள் தான் இப்போது அதிகமாகி விட்டது. இதனால் ஏற்பட்ட காலநிலை பருவ மாற்றங்களால் இந்த வருடம் நடந்த இயற்கை பேரழிவுகளை பற்றி பார்க்கலாம்.

6 இயற்கை பேரழிவுகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: இந்த ஆண்டு நடந்த இயற்கை பேரழிவுகளில் மிகவும் முக்கியமானது ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம். கிட்டத்தட்ட 6.3 ரிக்டர், 5.5 ரிக்டர், 5.4 ரிக்டர் என தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் எறாத்து மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. சரியான புள்ளி விவரம் என்பது இன்று வரை அந்த நாட்டு அரசுக்கு கிடைக்கவில்லை.

ஹவாய் காட்டுத்தீ விபத்து: அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவு மாகாணத்தில் கிட்டத்தட்ட எட்டு தீவுகள் உள்ளன. இதில் மவுய் என்னும் தீவில் பயங்கர காட்டு தீ இந்த வருடம் ஏற்பட்டது. அந்த நகரத்தின் முக்கியமான பூங்காக்கள், கட்டிடங்கள் என அத்தனையுமே நெருப்பில் சிதிலமடைந்தன. இத்தனைக்கும் இந்த தீவு குளிர் பிரதேசமாக இருக்கும். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா சந்தித்த பயங்கரமான காட்டுத் தீ இது. இதில் 89 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ஜோஷிமத் நகரம்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜோஷிமத் நகரம், மலைகளின் அகரம் என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் ஏறுவதற்கு இந்த நகரம் தான் நுழைவு வாயில். கடந்த ஆண்டு இந்த நகரத்தின் பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட தொடங்கியது. இந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் புதைந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த இடம் இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா தளமாகும்.

பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: கிழக்கு லிபியாவை கடந்த செப்டம்பர் மாதம் டேனியல் என்னும் புயல் தாக்கியது. அன்று இரவே பெய்த கடும் கனமழையால் கிட்டத்தட்ட சுனாமியை போன்ற வெள்ளம் ஏற்பட்டது. இதில் சுமார் 18000 முதல் 20 ஆயிரம் வரை உயிர் பலிகள் ஏற்பட்டு இருக்கிறது. கடலில் மிதந்த பிணங்களை மீட்க முடியாமல் போகும் அளவுக்கு உயிர் பலிகள் மிரட்டி விட்டிருந்தது.

மிக்ஜாம் புயல்: வருடம் தோறும் டிசம்பர் மாதம் சென்னைக்கு ஏழரை சனி என்று தான் சொல்ல வேண்டும். இந்த வருடம் அது மிக்ஜாம் புயல் ரூபத்தில் வந்தது. ஆந்திராவில் கரையை கடக்க வேண்டிய புயல் சென்னையை மொத்தமாக தாக்கி விட்டு மூன்று நாட்கள் எல்லோரையும் வீட்டில் முடங்க செய்து விட்டது. இனி ஒரு சொட்டு மழை பெய்தாலும் சென்னை அழிந்து விடும் என்ற நிலைமையில் தான் அப்போது இருந்தது.

துவண்டு போன தென் தமிழகம்: இந்த வருடத்தின் கடைசியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை புரட்டி போட்டு விட்டது கனமழை. ஏரிகள் மற்றும் குளங்கள் உடைந்து வீடுகளிலும், ரோடுகளிலும் தண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்து விட்டது. ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து போகும் அளவில் இந்த வருடத்தில் தென் தமிழகத்தில் கனமழையின் பாதிப்பு இருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்