புதுடில்லி : மத்திய அரசின் பல்வேறு உத்தரவுகள் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வேலை நாட்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உள்ளிட்டவற்றிற்கு மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கைய்யா பல்வேறு விஷயங்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர், மத்திய அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 6 நாட்களாக உயர்த்தும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை. இது எதிர்க்கட்சிகள் பரப்பும் தவறான செய்தி. தவறான தகவல்களை பிரசாரம் செய்வதே அவர்களின் வழக்கம்.
சிவப்பு விளக்குகள் அகற்றப்பட்டதால், விஐபி.,க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்படாது. மக்கள் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதாலேயே இந்த பாதுகாப்பு ஏற்பாடு. தவிர, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கம் அல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் விஐபி என்பதே அரசின் கொள்கை.
அருணாச்சல பிரதேச இடங்களின் பெயர்களை சீனாவால் மாற்ற முடியாது. அருணாச்சலின் ஒவ்வொரு அங்குல இடமும் இந்தியாவுக்கு சொந்தமானது. சீனா பெயர் மாற்றியதாக அறிவித்துள்ள பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமானவை. அப்படி இருக்கையில் இந்திய நகரங்களின் பெயர்களை சீனாவால் எப்படி மாற்ற முடியும்? இவ்வாறு அவர் பேசி உள்ளார்.