fbpx
Connect with us

Cinemapettai

11-ல் 5 படங்கள் வெற்றி : அக்டோபர் வந்த படங்கள் ஓர் பார்வை

new-tamil-movies 2016

News | செய்திகள்

11-ல் 5 படங்கள் வெற்றி : அக்டோபர் வந்த படங்கள் ஓர் பார்வை

2016ம் ஆண்டின் 80 சதவீதத்தைக் கடந்தாகிவிட்டது. புதிய படங்களை வெளியிடும் முக்கியமான விசேஷ நாட்களும் போய் விட்டன. அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினம் மட்டுமே இன்னும் பாக்கி இருக்கிறது. அப்போது சில பெரிய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

2016ம் ஆண்டின் கடந்து போன பத்து மாதங்களில் அக்டோபர் மாதத்திற்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. இத்தனைக்கும் தீபாவளியும் அந்த மாதத்தில்தான் வந்தது. அப்படியிருந்தும் இந்த ஆண்டிலேயே ஒரு மாதத்தில் குறைவான படங்கள் வெளிவந்த மாதமாக அக்டோபர் மாதம் அமைந்துவிட்டது.

ஒரு வாரத்திற்கு சராசரியாக 5 படங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், அக்டோபர் மாதத்தில் மொத்தமாகவே 11 படங்கள் மட்டுமே வெளியாகியிருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாகவே உள்ளது. ஆனாலும், வெற்றியைப் பொறுத்தவரையில் ஏறக்குயை சரி பாதி படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து அந்தக் குறையைப் போக்கிவிட்டன.

அக்டோபர் 7ம் தேதி தேவி, ரெமோ, றெக்க ஆகிய படங்கள் வெளிவந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் நாயகனாக நடித்து வெளிவந்த படம் தேவி. சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் முதல் முறையாக நடித்த படம் ரெமோ. விஜய்சேதுபதி முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படம் றெக்க. மூன்று படமுமே ரசிகர்களுக்கு அதிகமான குறைகளை வைக்காமல் அவர்களைத் திருப்திப்படுத்திய படங்களாக அமைந்தன. இந்த மூன்று படங்களுமே தீபாவளிக்கு வெளிவந்த படங்களையும் சமாளித்து 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

அக்டோபர் 14ம் தேதி அம்மணி திரைப்படம் மட்டுமே வெளியானது. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அவரும், 80வயது சுப்புலட்சுமி பாட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம். இந்த மாதிரியான யதார்த்தமான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது ஆரோக்கியமான விஷயம். இப்படிப்பட்ட படங்களை பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டு படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் இன்னும் நன்றாக ஓட வாய்ப்புள்ளது.

அக்டோபர் 21ம் தேதி சிறிய படங்களின் நாள் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று மட்டும் காகித கப்பல், நீ என்பது, நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனாலும் வழக்கம் போல மக்களிடம் சரியாகச் சென்று சேராத, இந்த ஆண்டின் படங்களின் எண்ணிக்கையை மட்டும் கூட்டிய படங்களாக அந்தப் படங்கள் அமைந்தன.

அக்டோபர் 28ம் தேதி தீபாவளி தினம். அன்றைய தினம் முதலில் பல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சில படங்கள் தங்களது வெளியீட்டை நவம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்தன. காஷ்மோரா, கொடி, திரைக்கு வராத கதை ஆகிய படங்கள் அன்று வந்தன. முதல் நிலை நட்சத்திரங்கள் நடித்து படங்கள் தீபாவளிக்கு வராதது அவர்களது ரசிகர்களை நிறையவே ஏமாற்றமடைய வைத்தன. இருந்தாலும் காஷ்மோரா படம் கண்ணுக்கு விருந்தாக அமைந்து தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் நல்ல வசூலைக் கொடுக்கும் படமாக அமைந்தது.

கொடி படம் தனுஷின் முந்தைய படங்களைக் காட்டிலும் நன்றாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், ஒரு முழுமையான அரசியல் படமாக இல்லாமல் போனது. அதை மட்டும் சரி செய்திருந்தால் இந்தப் படம் பெரிய வசூலைக் கொடுத்திருக்கும். திரைக்கு வராத கதை முற்றிலும் பெண்களே நடித்த படம். படத்தின் தலைப்பே ரசிகர்களை தியேட்டர்களுக்கு வராமல் தடுத்திருக்கும்.

அக்டோபர் 29ம் தேதி கடலை படம் மட்டுமே வெளிவந்தது. பத்திரிகையாளர்களுக்குக் கூட எந்த ஒரு காட்சியையும் திரையிடாமல் இப்படிப்பட்ட படங்களை எதற்கு எடுக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. இப்படி ஒரு படம் எப்போது தயாரானது எப்படி திரைக்கு வந்தது என்பது கூட பலருக்கும் தெரியாமல் போனது. திரைக்கு வந்த பிறகாவது யாருக்காவது தெரிந்ததா என்பது சந்தேகம்தான்.

அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 5 பட வெளியீட்டுத் தினங்கள் அமைந்தன. அதில் 14ம் தேதியும், 29ம் தேதியும் ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்தது. 7ம் தேதி மூன்று படங்களும், 21ம் தேதி மூன்று படங்களும், 28ம் தேதி மூன்று படங்களும் வெளிவந்தன.

மொத்தமாக 11 படங்கள் வந்தாலும் தேவி, ரெமோ, றெக்க, காஷ்மோரா, கொடி ஆகிய படங்கள் வசூல் ரீதியான வெற்றிப் படங்களாக அமைந்தது ஆறுதலான விஷயம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top