புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கையா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Director Suresh Sangaiah: சில தினங்களுக்கு முன்பு மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் உயிர்நீத்தார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்த சோகம் முடிவதற்குள்ளாகவே அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது.

ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கையா நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 41 வயதான அவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவருடைய இறப்பு திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படம் தான் இவருடைய முதல் படைப்பு. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்ற இப்படம் விருதுகளையும் தட்டிச் சென்றது.

திரையுலகில் தொடரும் அடுத்தடுத்த சோகம்

அதை அடுத்து 2023ல் இவர் சத்திய சோதனை என்ற படத்தை இயக்கினார். பிரேம்ஜி ஹீரோவாக நடித்திருந்த அப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகர் செந்திலை வைத்து ஒரு படத்தை இவர் இயக்கினாலும் படம் வெளியாகவில்லை.

தற்போது யோகி பாபுவை வைத்து கெணத்த காணும் என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த சூழலில் தான் சுரேஷ் சங்கையா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

ஆனால் இந்த பாதிப்பால் அவருக்கு கல்லீரல் பிரச்சனையும் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அது பலனளிக்காத நிலையில் நேற்று இரவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்துள்ளது.

தற்போது அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அவருடைய இந்த மறைவு செய்தியை கேட்ட அனைவரும் அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News