வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கர்ப்பத்திற்கு முன்னும், பின்னும் இந்த 4 அறிகுறி இருக்கா? அப்போ கண்டிப்பா டாக்டர்கிட்ட போய் பார்த்துடுங்க

Health: வீட்ல இருக்கிற எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்ற பெண்கள் பாதி நேரம் அவங்க உடம்புல நடக்குற விஷயங்களை கவனிக்கிறது கிடையாது. அப்படியே ஏதாவது அறிகுறி தெரிஞ்சாலும் இதற்கு எதுக்கு ஹாஸ்பிடல் போகணும்னு அசால்டா விட்டுடுறாங்க.

முளையிலேயே கிள்ளி எறியாததால் ஒரு சில வியாதிகள் பெரிய அளவில் பெண்களை பாதிக்கிறது. இந்த காலகட்டத்தில் இயற்கையாக கருவுறுவது என்பது எட்டாத கனியாக பல பேருக்கு ஆகிவிட்டது. இதற்கு ஒரு பத்து சதவீத காரணமாக இந்த ஆரம்ப கட்ட அறிகுறிகளை கவனிக்காமல் விட்டது கூட சொல்லலாம்.

பூபெய்திய காலத்தில் இருந்து ஒரு சில அசாதாரண விஷயங்கள் நமக்கு நடக்கும் போது அதை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி அதற்கான தீர்வை உடனே எடுத்து விட வேண்டும். அதேபோன்று தாய்மைக்கு காத்திருக்கும் பெண்கள் அந்த நேரத்தில் தங்களுடைய உடம்பில் இருக்கும் சில சிக்கல்களை வெளிப்படையாக மருத்துவர்களிடம் பேசி அதற்கு தீர்வு காண வேண்டும்.

குழந்தை பிறந்தாச்சு, இனி உடம்பு இப்படி தான் இருக்கும்னு நம்மளே கற்பனை பண்ணிக்கிட்டு ஒரு சில அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். இது பெரிய அளவில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

கர்ப்பத்திற்கு முன், பின்னும் கீழ் வரும் நான்கு அறிகுறிகள் உங்கள் உடம்பில் இருந்தால் தயவு செய்து மருத்துவரை பார்த்து உடனே அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த 4 அறிகுறி இருக்கா?

மாதவிடாய் வலி: மாதவிடாய் சமயத்தில் தசை பிடிப்புகள், வயிற்று வலி மற்றும் தலைவலி என நிறைய அறிகுறிகள் தோன்றும். இதில் சிலருக்கு அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இந்த வலி நாம் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு முதல் நாள் இருக்கும், அடுத்த இரண்டு மூன்று நாட்கள் படிப்படியாக இந்த வலி குறைந்திருக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ இது தாங்க முடியாத வலியாக இருக்கும். இப்படி மாதவிடாய் சமயத்தில் தீராத அடி வயிற்று வலி ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை போய் பார்க்க வேண்டும்.

உடலுறவின் போது ஏற்படும் வலி: உடலுறவின் போது ஏற்படும் அசௌகரியங்களை பொதுவாக பெண்கள் வெளியில் பேசுவது கிடையாது. ஆனால் உண்மையில் இந்த விஷயம் தான் வெளியில் பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயம். தாம்பத்தியம் மேற்கொள்ளும் பொழுது தீவிர வலி ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை போய் பார்க்க வேண்டும். பெண்ணுறுப்பு வறட்சி தான் இந்த வலிக்கு காரணம். ஈஸ்ட்ரோஜன் குறைபாடு இருப்பது தான் இந்த வறட்சி தன்மையை உருவாக்கும்.

வெள்ளைப்படுதல்: மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பு. கருமுட்டை முதிர்ச்சி அடைவதை தான் இந்த வெள்ளைப்படுதல் உணர்த்துகிறது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு இது ரொம்பவும் அதிகமாக படும். அது மட்டுமில்லாமல் சில நேரங்களில் மஞ்ச அல்லது பச்சை நிறத்தில் இது வெளிப்படும். அது போன்ற சமயத்தில் உடனடியாக மருத்துவரை போய் பார்த்து விட வேண்டும்.

பெண் உறுப்பில் கட்டி: பெண்ணுறுப்பில் வல்வா என்ற ஒரு பகுதி இருக்கும். இதில் புடைப்பு அல்லது சதை வளர்ச்சி போன்று காணப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை பார்க்க வேண்டும். பாலியல் ரீதியான நோய் இருந்தால் தான் இது தோன்றும். மருத்துவரை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் ரொம்பவும் வெளிப்படையாக உங்களுடைய பாலியல் வரலாறை பற்றி அவரிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் இதற்கு தீவிர சிகிச்சை கொடுத்து குணப்படுத்த முடியும்.

- Advertisement -

Trending News