பாலிவுட் பட அதிபர் மதூர் பண்டார்கரை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற வழக்கில் பிரபல மாடல் அழகி பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த பிரபல பட அதிபரும், சினிமா இயக்குனருமான மதூர் பண்டார்கர். 2005–ம் ஆண்டு கூலிப்படை மூலம் தன்னை பிரபல மாடல் அழகி பிரீத்தி ஜெயின் கொலை செய்ய முயன்றதாக மும்பை போலீசில் மதூர் பண்டார்கர் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பிரீத்தி ஜெயின் 2005–ம் ஆண்டு மும்பை பிரபல தாதா அருண் காவ்லியின் உதவியாளர் நரேஷ் பர்தேசி மூலம் மதூர் பண்டார்கரை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி இதற்காக நரேஷ் பர்தேசிக்கு பிரீத்தி ஜெயின் ரூ.75 ஆயிரம் பணம் கொடுத்து உள்ளார். எனினும் இந்த சதியை திட்டமிட்டபடி நரேஷ் பர்தேசியால் அரங்கேற்ற முடியவில்லை.

இதையடுத்து, தான் கொடுத்த பணத்தை பிரீத்தி ஜெயின் திரும்ப கேட்டுள்ளார். இந்த வி‌ஷயம் தாதா அருண் காவ்லிக்கு தெரிய வந்தது. இதனால் காவ்லியின் ஆட்கள் இந்த தகவலை போலீசுக்கு தெரிவித்து உஷார் படுத்தினர். நீண்ட விசாரணைக்கு பிறகு பிரீத்தி ஜெயின், பட அதிபர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பிரீத்தி ஜெயினும், நரேஷ் பர்தேசியும் கைது செய்யப்பட்டனர். சதித் திட்டத்தை அரங்கேற்ற நரேஷ் பர்தேசிக்கு ஆயுதம் வாங்கி கொடுத்த அவருடைய நண்பர் சிவராம் தாஸ் பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு முதலில் தெற்கு மும்பையில் உள்ள சீவ்ரி விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. அதன்பின்பு மும்பை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மும்பை செசன்சு கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. சதித்திட்டத்தில் ஈடுபட்டு பட அதிபர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய முயன்ற மாடல் அழகி பிரீத்தி ஜெயின், நரேஷ் பர்தேசி, சிவ்ராம் தாஸ் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கோர்ட்டில் ஆஜராகி இருந்த பிரீத்தி இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.