பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி, வேலைபார்த்துவந்த 38 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்நாட்டின் ஈஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் வெளிநாட்டவர்கள் முறையான அனுமதியின்றி, சட்டவிரோதமாக தங்கி வேலைபார்த்துவருவதாக, பிரிட்டன் குடியுறவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அவர்கள் அங்கேயுள்ள ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

 

இந்த சோதனையில், ஒரு ஆப்கானியர் சிக்கினார். அவரை விசாரித்ததில், அங்கே இந்தியாவைச் சேர்ந்த 38 பேர் தன்னைப் போன்றே முறைகேடான வகையில் தங்கி வேலைபார்த்துவருவதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த 38 இந்தியர்களையும் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் கைதுசெய்தனர். அவர்களில், 31 பேர் அனுமதிக்கப்பட்ட விசாக்காலம் முடிவடைந்தபிறகும், பிரிட்டனில் தங்கி பணிபுரிந்துவந்துள்ளனர். மேலும், 7 இந்தியர்கள் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி, முறைகேடாக அங்கே வேலைபார்த்துள்ளனர்.

விசா மோசடி செய்த காரணத்திற்காக, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.