Kalabhavan-Maniபிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி(45). அவருக்கு கால்நடை துறை டாக்டரான நிம்மி என்ற மனைவியும், 10ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். கலாபவன் மணி கடந்த 2 நாட்களுக்கு முன் திடீர் என்று உடல் நலம் பாதிக்கப்பட்டு கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கலாபவன் மணி உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடலில் விஷம் கலந்திருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து கொச்சி போலீசிற்கு தகவல் அனுப்பப்பட்டது. தொடர்ந்து இரவு 7.15 மணியளவில் அவர் இறந்ததாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கலாபவன் மணி மது அருந்தியிருந்ததாகவும், மதுவில் மெத்தனால் என்ற விஷம் கலந்திருந்ததாகவும் தகவல் வெளியானது. கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதால் சாலக்குடி போலீசார் மர்மச் சாவு என்று வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது உடல் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை பிரேத பரிசோதனை நடந்தது. இதில் அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் திருச்சூரில் உள்ள சங்கீத நாடக அகாடமி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மாலை 3.30 மணியளவில் அவரது ஊரான சாலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. திருச்சூர் தொடங்கி அனைத்து இடங்களிலும் அவரது உடலை பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். வீட்டிலும் கட்டுக்கடங்காத அளவில் மக்கள் திரண்டனர். அவரது வீட்டின் 2 நுழைவு வாயில்களையும் பூட்டிய பின்னரே இறுதி சடங்குகள் ெதாடங்கியது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர், மார்க்சிஸ்ட் ெபாலிட் பீரோ உறுப்பினர் பினராய் விஜயன், மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சாலக்குடியில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. உடலில் கலந்திருந்த மெத்தனால்: இதற்கிடையே கலாபவன் மணி சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை மது அருந்தியதாக தெரியவந்துள்ளது.
திருச்சூர் எஸ்பி கார்த்திக் தலைமையிலான போலீசார் பண்ணை இல்லம் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விசாரிக்க திருச்சூர் டிஎஸ்பி சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கலாபவன் மணியுடன் மது அருந்திய இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரபல நடிகர் மற்றும் நண்பர்கள் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ணை வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.