இந்தியா முழுவதும் உள்ள 275 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் தலைவர் அனில் டி சகாஷ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து தான் அதிக கல்வி நிறுவனங்கள் கல்லூரியை மூட அனுமதி கோரியுள்ளன. இந்த இரண்டு மாநில பொறியியல் கல்லூரிகளின் கூட்டுத்தொகை மற்ற எல்லா மாநிலத்து கல்லூரிகளின் கூட்டுத்தொகைக்கு இணையாக உள்ளதாக அனில் கூறியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கழகமானது இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை குறைப்பதில் கவனம் செலுத்திவருகிறது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி நடைபெற்ற ஆசிரியர் மின்னணு கற்றல் பயிற்சி நிகழ்ச்சியில் அனில் டி. சகாஷ்ரபுத்தே கலந்து கொண்டார். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கழகமானது நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எட்டு வகையான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்றும், அவர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றும் ஏஐசிடிஇ இயக்குநர் மந்தீப் சிங் மன்னா தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் உயர் கல்வி பயில ஸ்வயம் (SWAYAM) எனும் பெயரில் மின்னணு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சுமார் 280 தலைப்புகள் தற்போது உள்ளன, மேலும் 350 தலைப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 2000 தலைப்புகள் சேர்க்கப்படும் என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் கூறியிருக்கிறார். விருப்பம் உள்ள ஆசிரியர்கள் புதிய தலைப்புகளை சேர்க்க விரும்பினால், அது குறித்த மூன்று நிமிட வீடியோ எடுத்து அனுப்பலாம் என்றும், அதனை பார்த்த பின்னர் சேர்ப்பது குறித்து குழு முடிவு செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது பேசிய அனில், இந்தியா முழுவதில் இருந்தும் 275 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்காக விண்ணப்பித்துள்ளன என்று கூறினார்.