Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓய்ந்தது பஞ்சாயத்து.. புலிகேசியாக களமிறங்கும் வடிவேலு.

இயக்குநர் ஷங்கர் தயாரிக்கும் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஓ.கே சொல்லி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் வடிவேலு.
ராஜ்கிரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு, `வெடி’ வேலுவாக மாறி தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். காமெடி ஜாம்பவான்களான கவுண்டமனி – செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலத்திலேயே தனக்கென தனி முத்திரையைப் பதித்தார். வடிவேலுவின் காமெடியை நம்பியே காமெடிக்கென தனி சேனல்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. அந்த சேனல்களின் முக்கியமான காமெடி மெட்டீரியல் வடிவேலு தான். அதேபோல், சமூக வலைதளங்களில் பிரபலமான மீம் கிரியேட்டர்களின் குலசாமியே சாட்சாத் வடிவேலுவே. வடிவேலு ஃபார் லைஃப் என்ற ஹேஷ்டேக்கில் இன்றளவும் வடிவேலு மீம்கள் சோஷியல் மீடியாக்களில் பேமஸ்.
வடிவேலுவின் கேரியரில் முக்கியமான படமாகக் கருதப்படுவது சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் எனலாம். இயக்குநர் ஷங்கரின் முதல் தயாரிப்பான அந்த படத்தில் மன்னர் மற்றும் புரட்சியாளர் என இருவேறு கதாபாத்திரங்களில் வடிவேலு அதகளப்படுத்தியிருப்பார். இந்த படம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. பெரிய ஹீரோக்களின் படத்துக்கு இருந்த ஓபனிங் அந்த படத்துக்கு இருந்தது. அதேபோல், தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டையே சிம்புதேவன் தொடங்கிவைத்தார்.
அதேபோல், தயாரிப்பாளராக ஷங்கரும் நல்ல வருமானம் பார்த்துக் கொடுத்தது. அதன்பின்னர், அரசியல் அரிதாரம் பூசிய வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது. சில படங்கள் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் நடித்த படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தையும் இயக்குநர் ஷங்கரே தயாரிக்க, சிம்புதேவனே இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. வடிவேலு இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் அரண்மனை செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் சூடுபிடித்தன. ஒன்பது கோடி ரூபாய் செலவில் செட் போடப்பட்டது. ஷூட்டிங் தொடங்கிய சில நாட்கள் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர் படக்குழுவினர் கொடுக்கும் உடைகளை அணிய மறுக்கிறார், கதை உருவாக்கத்தில் தலையிடுகிறார் என வடிவேலு மீது புகார் எழுந்தது.
மேலும், ஷூட்டிங்கைத் தாமதமாகத் தொடங்கி தனக்கு பொருளாதாரரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஷூட்டிங்கில் கலந்துகொள்வதை வடிவேலு மறுத்துவிட்டார்.
படக்குழுவினர் எவ்வளவோ சமாதானம் செய்தும் வடிவேலு ஷூட்டிங்கில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால், இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்குப் படக்குழுவினர் கொண்டுசென்றனர். இதுதொடர்பாக விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், வடிவேலுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் அல்லது செட் அமைக்க ஆன செலவு மற்றும் அட்வான்ஸ் தொகை ஆகியவற்றை வட்டியுடன் சேர்த்து ரூ.9 கோடியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு உத்தரவிட்டது. இதனால், கருத்து வேறுபாடுகளை மறந்து ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வடிவேலு முடிவெடுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
