கொடநாடு கொலையில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் இருவரில் ஒருவர் சாலை விபத்தில் பலியாகி, மற்றொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா உள்ளது. இங்கு கடந்த 24ஆம் தேதி காவலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இவரது கழுத்தை நெரித்து கொலை செய்து இருந்தனர். மேலும், இவரது உடம்பில் பல்வேறு காயங்கள் இருந்தன. இவருடன் பணியாற்றி வந்த கிருஷ்ண பகதூர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் கீழ், இந்தக் கொலை மற்றும் கொள்ளையில் கனகராஜ் மற்றும் சயான் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சேலம் அருகே ஆத்தூரில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு சேலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதுதான், கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் தேடப்பட்டு வந்த கனகராஜ் என்பது தெரிய வந்தது. இவர் இரவில் ஆத்தூர் அருகே சென்று கொண்டு இருந்தபோது, விபத்தில் இறந்தாரா? அல்லது என்கவுண்டரில் கொல்லப்பட்டாரா? போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் திடீர் திருப்பமாக, தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான சாயன் தனது குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் பாலக்காட்டில் சென்று கொண்டு இருந்தபோது விபத்து ஏபட்டது. இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தை பலியாயினர். படுகாயமடைந்து நினைவிழந்த சயான் முதலில் பாலக்காடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கு அவரசப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சயானுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர் குணமாகி இவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளும்போதுதான், இந்தக் கொலை மற்றும் கொள்ளையில் முக்கியக் குற்றவாளி யார் என்பதும், எதற்காக கொடநாட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் என்பது தெரிய வரும். அங்கிருந்த ஆவணங்களை எடுப்பதற்கு இவர்களை யாராவது பயன்படுத்தினார்களா? அல்லது கொள்ளையில் ஈடுபட முயற்சித்தார்களா? போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுநராக பணியாற்றியவர்தான் கனகராஜ். இவருக்கு கொடநாட்டில் அனைத்து விஷயங்களும் தெரியும் என்பதால், இவர்தான் இந்தக் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டு வந்தார். அவரே தற்போது விபத்தில் பலியாகி உள்ளார். குற்றவாளிகளை தேடி வரும்போது, விபத்துக்கள் மூலம் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.