படிப்பில் தேறாத பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பது வட இந்தியாவில் அதிகம். அரியானா மாநிலம் ரோஹ்டக்கில் அண்மையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.

இதில் ஒரு பள்ளியில் 208 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், வெறும் 31 மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் ரோட்டுக்கு வந்தனர். மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

44 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியதால், மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். அந்த மாணவியை போலீசார் தண்ணீர் ஊற்றி எழுப்பினர். அவரிடம் விசாரித்தபோது, தேர்வில் தோல்வியடைந்ததால், வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும், இதனால் தேர்வு முடிவுகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் தேர்வு முடிவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் சிலரே கூறியதையடுத்து மாணவிகள் தெருவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.