பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் கலந்துகொள்கின்றன.

யு.எப்.பி.யு., எனும் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, பிப்., 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. அதையடுத்து, மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள், யு.எப்.பி.யு., நிர்வாகிகளுடன், நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதையடுத்து 28ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர், டி.தாமஸ் பிராங்கோ கூறியதாவது:

வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், முயற்சிகள் எடுத்து வருகிறது. வாரம், ஐந்து நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம். பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தனர். நான்கு நாட்களுக்கு மட்டுமே, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதை அதிகரித்து தர வேண்டும் என்றும் கோரியுள்ளோம். இப்போராட்டத்தில், பொதுத்துறை வங்கிகளுடன் இனைந்து தனியார் வங்கிகளும் பங்கேற்க இருப்பதால் தமிழகத்தில் 10 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும்.