மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமான ஆதி படத்தின் வெற்றி விழாவில் தயாரிப்பாளர் தரையில் உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்த்தது திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாள சினிமா உலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலிற்கு ப்ரணவ் என்ற மகனும், விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். மலையாள ஹிட் இயக்குனர் ஜித்து ஜோசப்பிடம் ப்ரணவ் உதவி இயக்குநராக இருந்தவர். பல படங்களில் உதவியாளராக இருந்தார். தனது திரை ஆசான் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஆதி படத்தின் மூலம் நாயகனாகவும் தற்போது அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் ப்ரணவ், தாண்டோட்ட வீரராக நடித்துள்ளார். தாண்டோட்டம் என்பது தடைகளைத் தாண்டி தாண்டி ஓடக்கூடிய ஒரு விளையாட்டு. படத்தில் ப்ரணவிற்கு நாயகி இல்லை. மலையாள ஆக்‌ஷன் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த ஜனவரி இறுதியில் இப்படம் திரைக்கு வந்தது. நல்ல வசூலை பெற்ற இப்படம் நூறு நாள்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் நூறாவது நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், மோகன் லால், பிரண்வ் ஆகியோருடன் படக்குழுவும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தரையில் தான் அமர்ந்து இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. என்ன இருந்தாலும் தயாரிப்பாளருக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டாமா என மலையாள திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் மீது பலரும் எதிர்மறையான விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், இதற்கு தயாரிப்பாளர் ஆண்டனியின் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், ஆண்டனி, மோகன்லாலின் தீவிர பக்தர். அவர் தொடங்கி கொடுத்த ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். நிறுவனமும் செம வசூலுடன் இன்று வரை புகழின் உச்சியில் இருக்கிறது. மோகன் லாலின் எந்த ஒரு முக்கிய நிகழ்விலும் தவறாமல் ஆண்டனி கலந்து கொள்வார். இதனால் தான் ஆதி வெற்றி விழாவிலும் தன் வீட்டு நிகழ்ச்சி போல தரையில் உட்கார்த்து பார்த்து இருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.